தமிழ்நாட்டில் 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!

by Column Editor

தமிழ்நாட்டில் 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும் பள்ளிக்கல்வித்துறை , நிச்சயமாக இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படும் என்று உறுதியாக தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் 10,11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிவடையும் என்றும் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் தொடங்குகிறது என்றும் மாணவர்கள் மன நிறைவோடு தேர்வை எழுத வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதி அட்டவணை இன்னும் ஒரு மணி நேரத்தில் http://tnschools.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment