நாளை உருவாகும் காற்றழுத்தம்- புயல் சின்னமாக மாற வாய்ப்பு

by Column Editor

வருகிற 2, 3-ந் தேதிகளில் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமுதல் மிக கனமழை பெய்தது.

இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாவதற்கான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான சூழல் இல்லாததால் தள்ளிப்போனது.

இந்தநிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நாளை (30-ந்தேதி) உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் அது நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறக்கூடும்.

இதன் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதற்கிடையில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.

மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

வடகடலோர மாவட்டங்கள், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். நாளை (30-ந்தேதி) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், வருகிற 1-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

வருகிற 2, 3-ந் தேதிகளில் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 17 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம்-16 செ.மீ., களியல்-14 செ.மீ., சிற்றாறு- 13 செ.மீ., ஊத்துக்கோட்டை- 12 செ.மீ., புதுச்சேரி, தக்கலை, பரங்கிப்பேட்டை தலா 11 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகும் நிலையில் நாளை மறுநாள் (டிசம்பர் 1-ந்தேதி) மத்திய கிழக்கு அரபிக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் அரபிக்கடல் பகுதியில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாவதால் தமிழகத்தில் மேலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment