தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு- சென்னை, திருச்சி ஆஸ்பத்திரிகளில் தீவிர கண்காணிப்பு

by Column Editor

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கொரோனா தொற்று மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒமைக்ரான் இன்னும் உறுதியாகவில்லை.

சென்னை:

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. பல லட்சம் உயிர்களை பலி வாங்கியதோடு, கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவிலும் வேகமாக பரவிய இந்த தொற்று மத்திய, மாநில அரசுகளின் தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசிகளும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் புதியதாக மரபணு உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் வடிவில் உலகை அச்சுறுத்த தொடங்கி உள்ளது. தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ள நிலையில் இந்தியாவிலும் கர்நாடகத்தில் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒமிக்ரான் பரவியுள்ள தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இங்கிலாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகளிடம் மாதிரிகளை சேகரித்து முறையாக பரிசோதிக்கவும், விமான நிலையங்களில் கூடுதல் வசதிகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி நாடு முழுவதும் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாட்டு நடைமுறை நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்தன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களில் இந்த பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து மதுரை, திருச்சியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுவரை தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று யாருக்கும் இல்லை என்றார்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன் தினம் இரவு 12 மணி முதல் சிங்கப்பூரில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மட்டும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கட்டணமாக ரூ.700 நிர்ணயம் செய்யப்பட்டு பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் சிங்கப்பூரிலிருந்து வந்த இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உட்பட 663 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று இரவு 10.45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் குழந்தைகள் உட்பட 141 பேர் பயணம் செய்தனர். இதில் 133 பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அப்போது அந்த விமானத்தில் வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த 56 வயது பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டு தனி அறையில் தங்க வைக்கப்பட்டார். இன்று அவர் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி டீன் வனிதா கூறுகையில், சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அவருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய அவரது ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு கூறும்போது, சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கொரோனா தொற்று மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒமிக்ரான் இன்னும் உறுதியாகவில்லை. அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இதே போல் லண்டனில் இருந்து நேற்று இரவு சென்னை வந்த விமான பயணிகளில் 10 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த குழந்தை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குழந்தையுடன் பயணித்த அருகில் இருந்த விமான பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னை விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் கொரோனா தொற்று உறுதியாகும் நபர்கள் அனைவரையும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 150 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக டீன் தேரணிராஜன் தெரிவித்தார்.

தொற்று உறுதியானவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்காக டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள நவீன ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனை முடிவுகள் 5 முதல் 7 நாட்களுக்குள் தெரியும். அதன் பிறகு தான் ஒமிக்ரான் தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பது தெரிய வரும்.

Related Posts

Leave a Comment