உலகமே இடிந்து விழுந்தாலும் அமெரிக்கா, ரஷ்யா இடையேயான பிரச்சினை மட்டும் முடிவுக்கே வராது. உலகில் எந்த இரு நாட்டுக்குள் பிரச்சினை நிலவினாலும் அதன் பின்னால் இருந்து இயக்கும் இயக்குநர்கள் இந்த இரு நாடுகள் தான். அமெரிக்கா யாரையெல்லாம் ஆதரிக்கிறதோ அவர்களை ரஷ்யா எதிர்க்கும். ரஷ்யா எதிர்ப்பவற்றை அமெரிக்கா வலிந்து போய் ஆதரிக்கும். இதைத் தான் கடந்த கால வரலாறும் நமக்கு உணர்த்துகிறது. குறிப்பாக ஒரு சிறிய நாட்டை காலனியாக்கி வளங்களைச் சுரண்டி ஏகபோக உரிமை கொண்டாட வேண்டும் என்பதே இரு நாடுகளின் ஒற்றை குறிக்கோள்.
அப்படியாக தான் உக்ரைனை அடைய துடிக்கிறது ரஷ்யா. ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் ரஷ்யாவும் உக்ரைனும் இருந்தன. பின்னர் சோவியத் யூனியனும் உடைந்தது. நாடுகளும் பிரிந்தன. அந்த வகையில் 1991ஆம் ஆண்டு உக்ரைனும் தனி நாடாக பிரிந்தது. தனக்கென தனி அரசியலமைப்பு கொள்கைகளை உருவாக்கியது. ஆனால் இதனை ரஷ்யா ரசிக்கவில்லை. இதன் காரணமாக அதனை அபகரிக்க நெடுங்காலமாக திட்டமிட்டு வருகிறது. இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இதற்கு எதிராக நின்றன. ஆகவே மறைமுக எதிர்ப்பு கொடுக்க ரஷ்யா திட்டம் தீட்டியது.
அதன்படி தனக்கு தோதான தலைவரை அதிபராக்கி உக்ரைனில் பொம்மை அரசாங்கத்தை தோற்றுவித்தது ரஷ்யா. ஆனால் அதற்கும் வேட்டு வைத்தார்கள் உக்ரைனியர்கள். ரஷ்யாவுக்கு ஆதராவன அதிபர் 2014ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்குப் பின்னர் உக்ரைனின் கைகள் ஓங்கின. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கைகொடுக்க ரஷ்யாவின் கதி அதோகதியானது. இருந்தாலும் ஆட்சியை நிறுவ முனைப்பு காட்டி வருகிறது. உக்ரைனோ நேட்டோ எனப்படும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய ஆர்வமாக இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க போவதாகவும் தகவல் வெளியானது. அதற்கு முன்னேற்பாடாக ரஷ்யா தனது லட்சக்கணக்கான துருப்புகளை உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தியது. உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் களமிறங்கின. உலக நாடுகளிடையே பதற்றம் நிலவியவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் தோல்வியில் முடிந்தது. இதனால் எந்நேரமும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் எந்நேரமும் ஊடுருவலாம் என்பதால் தனது தூதரக அதிகாரிகள் குடும்பத்துடன் உடனே வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். மேலும் உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தார். இன்று மீண்டும் எச்சரித்துள்ள பைடன், உக்ரைனுக்குள் ஊடுருவினால் ரஷ்ய அதிபர் புதின் தனிப்பட்ட முறையில் குறிவைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி உலகத்தின் நிலையையே மாற்றும் என்று கூறியுள்ளார்.