பிரதமர் பதவியேற்புவிழா – இந்தியாவை சென்றடைந்தார் மாலைத்தீவு ஜனாதிபதி!

by Editor News

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ் இந்தியா சென்றடைந்துள்ளார்.

இந்திய பிரதமராக தொடா்ந்து 3ஆவது முறையாகவும் நரேந்திர மோடி இன்று (ஜூன் 9) பதவியேற்கவுள்ளாா்.

குறித்த நிகழ்வு, டெல்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்றிரவு 7.15 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

இதன்போது, நரேந்திர மோடியுடன் புதிய அமைச்சா்களும் பதவியேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இருந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவை அடுத்து, நரேந்திர மோடி மூன்றாவது முறையாகவும் பிரதமர் பதவியையேற்று அவரின் இடத்தை சமன் செய்துள்ளார்.

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ் இன்று காலை இந்தியாவை சென்றடைந்துள்ளார்.

தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் பவன் கபூர் வரவேற்றார்.

மாலைத்தீவில் இருந்து இந்திய வீரா்களை திரும்பப் பெறுமாறு, சீன ஆதரவாளரான அந்த நாட்டின் புதிய ஜனாதிபதி முகமது மூயிஸ் இந்திய அரசிடம் அறிவுறுத்தினாா். இதனால், இருநாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment