கோடை காலத்தில் சுற்றுலா செல்ல விருப்பமா – இந்தியாவில் இந்த 5 இடங்களை மிஸ் பண்ணாதீங்க

by Column Editor

உங்களின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற கூடிய வகையில் சில முக்கிய சம்மர் சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

கொரோனா பெருந்தொற்று குறைந்ததில் இருந்து பலர் சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருக்கக் கூடும். கடந்த 2 ஆண்டுகள் பெரும்பாலும் வீட்டிலேயே காலம் கழிந்துவிட்டது. அதனாலேயே வெளியில் சென்று நமக்குள் இருக்கும் பாரத்தை இயற்கை அன்னையின் மடியில் இறக்கி வைத்து விட வேண்டும் என்று பலர் எண்ணுவோம். அதே போன்று வெயில் காலமும் தொடங்கி விட்டது. எனவே செல்ல கூடிய சுற்றுலா தளம் நிச்சயம் இயற்கை எழில் சூழ்ந்த, அமைதியான இடமாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்போம். உங்களின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற கூடிய வகையில் சில முக்கிய சுற்றுலா தளங்கள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

டார்ஜிலிங் :

மேற்கு வங்காளத்தில் உள்ள கம்பீரமான மலைகளை கொண்ட நகரம் தான் இந்த டார்ஜிலிங். இங்கு சென்று உங்களின் கோடை விடுமுறையை மிகச்சிறப்பாக மாற்றலாம். இந்த நகரம் கஞ்சன்ஜங்கா மலைத்தொடர் மற்றும் அழகான தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. டார்ஜிலிங்கில் கோடைகால வெப்பத்தை தணிக்கலாம். இயற்கையால் சூழப்பட்ட நகரம், காணும் இடமெல்லாம் பச்சைப்பசேல் என்ற தோட்டங்கள் மற்றும் காடுகளின் வழியாக செல்லும் ரயில் பயணம், ஆகியவை இங்குள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும்.

மூணார் :

கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலை மீது அமைந்த ஒரு அழகிய சுற்றுலா தளமாக மூணார் உள்ளது. தென்னிந்திய சுற்றுலா தலங்களில் இது மிகவும் பிரபலமான ஒன்றாகும். கோடைக்காலம் முழுவதும் இதமான வானிலை இங்கு காணப்படும். இது பசுமையான மலைகளால் சூழப்பட்ட பகுதியாகும். இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு மூணார் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

ஷில்லாங் :

மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் வடகிழக்கு பகுதியில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். இங்கு கண்டுகளிக்க பசுமை நிறைந்த சுற்றுப்புறம், ஏரிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்ளன. யானை நீர்வீழ்ச்சி, ஷில்லாங் பீக், ஸ்வீட் ஃபால்ஸ், உமியம் ஏரி போன்ற பல முக்கிய இடங்கள் ஷில்லாங்கில் உள்ளது. இது கோடை காலத்திற்கு ஏற்ற அற்புதமான சுற்றுலா நகரமாகும்.

லடாக் :

இன்றைய இளைஞர்கள் பலரில் கனவு தேசமாக உள்ள இடம் தான் லடாக். அதே போன்று தெற்கில் வெப்பம் அதிகமாகும் போது மக்கள் வடக்கு நோக்கி சுற்றுலாவிற்கு செல்ல கூடிய ஒரு முக்கிய இடமாகவும் இது உள்ளது. வட இந்தியாவில் உள்ள முக்கிய மலை வாசஸ்தலங்களில் லடாக்கும் ஒன்று. உயரமான மலை தொடர்களை கொண்ட பகுதியாக இருப்பதால், இங்கு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் இங்கு நிறைய சாகசங்களைச் செய்யலாம், திபெத்திய கலாச்சாரத்தை அனுபவிக்கலாம், ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கு, பாங்காங் த்சோ ஏரி, சோ மோரிரி மற்றும் ஹெமிஸ் தேசியப் பூங்காவில் உங்களின் கோடை காலத்தை கழிக்கலாம்.

அவுலி :

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்கை தளங்களில் ஒன்று இந்த அவுலி நகரமாகும். இது ஆப்பிள் பழத்தோட்டங்கள் மற்றும் பைன் மரங்களின் தாயகமாக உள்ளது. அவுலியில் மலையேற்றம், பனிச்சறுக்கு, ரோப்வேயில் சவாரி மற்றும் பல்வேறு சாகச நிகழ்வுகளை மேற்கொள்ளலாம். மேலும் இங்குள்ள இனிமையான இயற்கை எழிலையும் அனுபவிக்க முடியும்.

Related Posts

Leave a Comment