திடீரென உயர்ந்த கொரோனா கேஸ்கள்… நகரத்துக்கு மொத்தமாக சீல் வைத்த சீனா!

by Column Editor

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தோன்றியது சீனாவில் தான். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு கலாச்சாரத்தைக் கொண்டுவந்ததும் அதே சீனா தான். இன்றைய நிலவரப்படி ஊரடங்கு எல்லாம் வேலைக்கு ஆகாது என்ற மனநிலைக்கு உலக நாடுகளின் அரசுகள் வந்துவிட்டன. மக்களும் ஊரடங்கு என்ற வார்த்தையைக் கேட்டாலே காத தூரம் ஓடுகிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் பொருளாதார சரிவு தான்.

எனினும் சீனா மட்டும் இன்னமும் முழு ஊரடங்கு பிறப்பிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. அதுவும் மிகப்பெரிய எண்ணிக்கையிலான கொரோனா கேஸ்கள் பதிவாவதில்லை. 10 கொரோனா கேஸ்கள் வந்துவிட்டாலேயே முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை சீன அரசு கொண்டுவந்து விடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அந்த வகையில் தற்போது சீனாவின் தென்மேற்கு பகுதியில் வியட்நாம் எல்லையிலுள்ள பைஸ் நகரில் முழு ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது சீன அரசு.

அந்த நகரத்தில் கடந்த மூன்று நாட்களில் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீன மாகாணமான குவாங்சியில் இருக்கும் பைஸ் நகரத்தில் 36 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க நகரத்திற்குள்ளும் மற்றும் சீனாவின் பிற பகுதிகளுக்கும் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களில் சீன அரசு தனிமைப்படுத்தும் 3ஆம் நகரம் இதுவாகும்.

முன்னதாக டிசம்பர் மாதம் 1.3 கோடி மக்கள் வசிக்கும் வடமேற்கு நகரமான சியானிலும் ஜனவரியில் 50 லட்சம் மக்களுடன் அன்யாங்க் நகரத்தையும் சீன அரசு முழு ஊரடங்கு பிறப்பித்திருந்தது. இந்த இரு நகரங்களைக் காட்டிலும் பைஸ் நகரம் மிகவும் குறைவான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த ஊரடங்கு சீன பொருளாதாரத்தைப் பாதிக்காது என கூறப்படுகிறது. தற்போது சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருவதால் அரசு மிக உன்னிப்பாக கொரோனா நிலவரத்தைக் கவனித்து வருகிறது.

Related Posts

Leave a Comment