2022ம் ஆண்டின் முதல் பங்கு வர்த்தக தினம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.57 லட்சம் கோடி லாபம்

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 929 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற எதிர்மறையான தகவல்கள் பங்குச் சந்தைகளில் எந்தவிதமான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் படிப்படியாக ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் பஜாஜ் பின்சர்வ் உள்பட மொத்தம் 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாக்டர் ரெட்டீஸ் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,688 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 873 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 137 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.265.95 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.57 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 929.40 புள்ளிகள் உயர்ந்து 59,183.22 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 271.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,625.70 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment