மீண்டும் ஒரு சோகச் சம்பவம் – ராஜஸ்தானில் ராணுவ விமானம் வெடித்து சிதறி விபத்து – விங் கமாண்டர் பலி!

by Column Editor

விமானப் படைக்குச் சொந்தமான ‘MIG – 21’ ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், விங் கமாண்டர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 8ம் தேதி, குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம்,ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக விமானம்,நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்துள்ளார். நேற்று மிக்-21 ரக விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, வனக்காவலர் ஒருவர் தகவல் அளித்ததும் விமானப்படை குழுவுடன் உள்ளூர் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு வந்தார்கள். மேலும், விமானம் தரையில் விழும் முன் தீப்பிடித்து எரிந்துள்ளதாக, உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளித்த சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, ஜெய்சால்மர் எஸ்.பி. அஜய் சிங் கூறுகையில் –

இந்திய விமானப்படையின் மிக்-21 விமானம் பாலைவன தேசிய பூங்காவின் (டிஎன்பி) பகுதியில் சாம் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் இருந்த வனக் காவலர் ஒருவர் MiG-21 விமானத்தின் சிதைந்த பகுதிகளை கண்டு, அதன் பிறகு உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார் என்றார்.

விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா மறைவுக்கு இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்து, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது-

IAF இன் MiG 21 விமானம் ஒரு பயிற்சியின் போது மேற்குத் துறையில் பறந்து விபத்துக்குள்ளானது. மேலும் விவரங்களுக்கு காத்திருக்கின்றோம்.இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமான விபத்தில் விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹாவின் சோகமான மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் IAF தெரிவிக்கிறது மற்றும் துணிச்சலான இதயத்தியுடைய அவரது குடும்பத்துடன் IAF உறுதியாக நிற்கிறது” என்று பதிவிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment