தமிழகத்தில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை குறைந்தது

by Column Editor

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தக்காளியின் வரத்து அதிகரிப்பது மூலம், அதன் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை:

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பருவ மழை தொடங்கியது. இதன் எதிரொலியால், தமிழகத்திற்கு தக்காளியின் வரத்து குறைந்தது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.180 வரை விற்கப்பட்டது.

அன்றாட சமையலுக்கு தேவைப்படும் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்ததால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவர்கள் அரசுக்கு வலியுறுத்தினர். தொடர்ந்து, பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.70, ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி விலை ரூ.30 குறைந்தது. கோயம்பேட்டு சந்தையில் நேற்று முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.30 குறைந்து, கிலோவுக்கு ரூ.80க்கு விற்பனையாகிறது. இதேபோல், 2-ம் ரக தக்காளி ரூ.100ல் இருந்து ரூ.30 குறைந்து, ரூ.70க்கு விற்பனையாகிறது.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நேற்று 30 லாரிகளாக இருந்த தக்காளி வரத்து, இன்று 45 லாரிகளாக உயர்ந்துள்ளது. தக்காளியின் வரத்து மேலும் அதிகரிப்பது மூலம், அதன் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தக்காளி விலை சற்று குறைந்துள்ளதால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment