ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : குறைந்தது 20 பேர் உயிரிழப்பு

by Lifestyle Editor

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஷிகாவா மாகாணத்தில் நோட்டோ தீபகற்பத்திற்கு அருகே நேற்று பிற்பகல் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

சுமார் 18,500 பேர் உயிரிழந்த மற்றும் காணாமல் போன 2011 மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்ட பெரிய சுனாமி எச்சரிக்கை இதுவென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பல சேதம் அடைந்துள்ள நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நிலநடுக்கம் காரணமாக 20 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி வஜிமா நகரத்தில் 15 பேர் இறந்ததாகவும் அவர்களில் 14 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த நிலையில் கன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முதல் ஒன்பது மாகாணங்களில் உள்ள கிட்டத்தட்ட 100,000 பேர் வெளியேற்றப்பட்டு விளையாட்டு அரங்குகள், பாடசாலை உடற்பயிற்சி கூடங்களில் தங்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று அதிகாலை இஷிகாவா மாகாணத்தில் கிட்டத்தட்ட 33,000 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment