கோடை விடுமுறை வந்து விட்டாலே குடும்பத்துடன் நாம் எங்காவது வெளியூர் செல்வது உண்டு. அதே நேரத்தில் நீங்கள் ஒரு அழகான தோட்டம் வைத்து இருந்தால் என்ன செய்வீர்கள். நீங்கள் வரும் வரைக்கு உங்கள் வீட்டு செடிகளை யார் பார்த்து கொள்வார் என்று புலம்புவது உண்டு.
இனி அந்த கவலையில்லை உங்களுக்காக இந்த கோடை விடுமுறையில் உங்கள் தாவரங்களை நீங்கள் எப்படியெல்லாம் எளிதாக பராமரிக்கலாம் என்பதற்கு நாங்கள் சில டிப்ஸ்களை இங்கே வழங்க உள்ளோம். இதன் மூலம் நீங்கள் வெளியூரில் இருந்து திரும்பி வரும் வரைக்கு செடிகள் பட்டு போகாமல் அப்படியே இருக்கும்.
மேலும் உங்கள் செடிகளுக்கு நீங்கள் இல்லாமல் தினசரி எளிதாக நீர் பாய்ச்சவும் முடியும். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே இந்த எளிய முறையை நீங்கள் செய்யலாம். சரி வாங்க இந்த கோடை விடுமுறையில் உங்கள் செடிகளை எப்படி பாதுகாக்கலாம் என அறிந்து கொள்வோம்.
நீர் பாய்ச்சுதல்
நீங்கள் விடுமுறையில் இருக்கும் போது உங்கள் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது என்பது கஷ்டமான விஷயம். வெளிப்புற மற்றும் உட்புற தாவரங்களை இந்த வெயிலுக்கு விட்டுச் செல்லும் போது ஆழமான நீர்ப்பாசனம் அவசியம். எனவே இதற்கு நீங்கள் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தலாம். தொட்டியில் உள்ள மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க இந்த சொட்டு நீர் பாசன முறை உதவுகிறது. இதற்கு ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியில் ஒரு ஓட்டை போட்டு அதில் டுயூப்பை சொருகி தலைகீழாக தொங்க விட்டு சொட்டு சொட்டாக தண்ணீர் சிந்தும் படி வைக்கலாம்.
இதன் மூலம் செடிக்கு தினசரி தண்ணீர் தேவை பூர்த்தியாகும். நீங்கள் வரும் வரைக்கு செடி வாடிப் போகுமே என்ற கவலை கிடையாது. மேலும் தொட்டியில் கூலாங்கற்களை போட்டு வைப்பது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை பாதுகாத்து வைக்கும்.
போகும் முன்பு செடியை நிழலில் வையுங்கள்
நீங்கள் ஊருக்கு செல்லும் முன்பு செடியை நிழலில் வைத்து செல்வது முக்கியம். ஏனெனில் அதிகப்படியான சூரிய ஒளியில் இருப்பது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி செடியை சீக்கிரமே காய்ந்து போக வைத்துவிடும். எனவே தொட்டியை தூக்கி நிழலான இடத்தில் வைப்பது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை நீண்ட நேரம் காக்க உதவி செய்யும். ஒரு சில நாட்களுக்கு தாவரங்களை வெயில் படாதபடி வைத்து செல்லுங்கள்.
சுய நீர்ப்பாசன சாதனங்களை பயன்படுத்தலாம்
செடிகளுக்கு தானாகவே தண்ணீர் செலுத்த நீர் ஸ்பைக் சாதனங்களை பயன்படுத்தலாம். கண்ணாடி பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி அதை தலைகீழாக வைத்து இந்த ஸ்பைக் சாதனத்தை மாட்டினால் போதும் தண்ணீர் சொட்டு சொட்டாக செடிகளுக்கு எளிதாக பாய ஆரம்பித்து விடும். மேலும் கண்ணாடி குளோப்களை பயன்படுத்தியும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சலாம். இந்த கண்ணாடி குளோப்களில் தண்ணீரை நிரப்பி தலைகீழாக தொட்டியில் வைக்கலாம். இதன் மூலமும் சொட்டு சொட்டாக தண்ணீர் பாய்ச்ச முடியும்.
காட்டன் ரோப் நீர்ப்பாசன முறை
இந்த முறையை செய்வதற்கு ஒரு வாளி நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது காட்டன் கயிற்றின் ஒரு முனையை வாளியில் உள்ள தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். மற்றொரு முனையை செடி உள்ள தொட்டியில் வைக்கவும். காட்டன் கயிறு தண்ணீரால் நனைந்து மெல்ல மெல்ல தண்ணீர் செடிகளுக்கு செல்லும். நீங்கள் வரும் வரைக்கு தொட்டியில் உள்ள மண்ணை ஈரப்பதத்துடன் வைத்திருக்க இந்த முறை உங்களுக்கு உதவும்.
தொட்டியில் ஈர வைக்கோலை போட்டு வையுங்கள்
நீங்கள் ஊருக்கு போகும் போது தொட்டியில் உள்ள ஈரப்பதத்தை பாதுகாக்க ஈர வைக்கோலை படுக்கை மாதிரி போட்டு வைக்கலாம். இது மண் சூரிய ஒளியால் சீக்கிரம் காய்ந்து போகாமல் தடுக்க உதவுகிறது. இப்படி போட்டு வைப்பதன் மூலம் தொட்டியில் களைச் செடிகள் வளருவதை தடுக்க முடியும். மேலும் தொட்டியின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், வேர்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கவும் உதவுகிறது.