மாயமான சீன பாதுகாப்புத்துறை அமைச்சரின் கதி என்ன?

by Lankan Editor

தனக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு மட்டுமே முக்கியமான பதவிகளை வழங்குவதில் கறாராக இருக்கும் ஜின்பிங், ஏன் ஷாங்ஃபூவை பதவிநீக்கம் செய்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

2 மாதங்களுக்கு முன் மாயமான சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லி ஷங்ஃபூ அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கின் காங் திடீரென பதவிநீக்கம் செய்யப்பட்டு, வாங் யி வெளியுறவுத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார். இப்போது முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சரின் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மார்ச் மாதத்தில் நடந்த சீன அமைச்சரவை மாற்றத்தில் தான் லி ஷாங்ஃபூ பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 29ஆம் தேதியில் இருந்து எந்த பொது நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை. அவரைப்பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஷாங்ஃபூ காணாமல் போய்விட்டதாக சர்வதேச ஊடகங்களும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஷாங்ஃபூவை பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியிரல் இருந்து நீக்கியிருப்பதாக சீன அரசு கூறியுள்ளது. அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுகிறார் என்ற அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நெருக்கமாக இருந்தவர் லி ஷாங்ஃபூ. தனக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு மட்டுமே முக்கியமான பதவிகளை வழங்குவதில் கறாராக இருக்கும் ஜின்பிங், ஏன் ஷாங்ஃபூவை பதவிநீக்கம் செய்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீனா ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கியதை அடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபூ தங்கள் நாட்டுக்குள் நுழையத் அமெரிக்கா தடைவிதித்தது.

ஏற்கெனவே அமெரிக்கா தைவானுடன் கொண்டிருக்கும் தொடர்புகளால் சீனா அதிருப்தியில் இருக்கிறது. இச்சூழலில் அண்மையில் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியிருப்பது சீனாவை அமெரிக்கா மீது மேலும் சீற்றம் கொள்ள வைத்துள்ளது.

இதனிடையே, சீன பிராந்தியத்தில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை நடத்த பென்டகனில் இருந்து அமெரிக்கப் பிரதிநிதிகள் அடுத்த வாரத்தில் பீஜிங் வருகைதர உள்ளனர். அவர்கள் வருகைக்கு சில நாள் முன்பாக பாதுகாப்புத்துறை அமைச்சரை நீக்கி இருப்பது கவனிக்கதக்கதாக உள்ளது.

Related Posts

Leave a Comment