சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று!

by Column Editor

நோய்த் தொற்று அதிகரிக்க எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த BA.2 என்ற ”ஸ்டெல்த் ஒமைக்ரான்” திரிபே காரணம் எனக் கூறப்படுகிறது.

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. அங்கு ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவில் செவ்வாய்க்கிழமை புதிதாக 5 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், புதன்கிழமை தினசரி தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து 3 ஆயிரத்து 290 ஆக பதிவாகியுள்ளது.

அங்கு திடீரென நோய்த் தொற்று அதிகரிக்க எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த BA.2 என்ற ”ஸ்டெல்த் ஒமைக்ரான்” திரிபே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த வகை வைரஸ் அதிவேகமாகப் பரவுவது மீண்டும் சுகாதாரத் துறை மீது அழுத்ததை சேர்க்கும் என அஞ்சப்படுகிறது.

இதன்காரணமாக லேசான அறிகுறியுடன் உள்ள தொற்றாளர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவின் தென்கிழக்கில் ஒரு கோடியே 75 லட்சம் மக்கள் வசிக்கும் தொழில் நகரமான ஷென்ஜென் உட்பட 13 நகரங்களில் முழுமையாகவும், ஷாங்காய் உள்ளிட்ட பல நகரங்களில் பகுதி அளவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஷென்ஜென் நகரில் 4-வது கட்டமாக பெரிய அளவில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ராணுவத்தில் பயிற்சி பெற்ற 7 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீனாவின் அண்டை நாடான தென் கொரியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் புதிதாக 4 லட்சத்து 741 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 164 பேர் உயிரிழந்தனர்.

தென்கொரியாவில் தகுதி வாய்ந்தவர்களில் 86 விழுக்காட்டினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும், 62 விழுக்காட்டினருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ள நிலையில், ஒமைக்ரான் வைரஸ் காரணமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஹாங்காங்கில் கொரோனா 5-வது அலை மார்ச் 5-ம் தேதி உச்சம் தொட்டதாகவும், தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாகவும் அந்நாட்டின் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment