ரயில்வே தனியார் மயமாக்கப்படுகிறதா? மத்திய அரசு பதில்

by Column Editor

ரயில்வேயை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேற்குவங்கத்தில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் ரயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளதாக கவலை தெரிவித்தார். மத்திய அரசின் முயற்சியால் மட்டும் ரயில்வே துறை வளர்ச்சியடையாது என்றும் எந்த ஒரு மாநில அரசுக்கும் பாரபட்சம் காட்டப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

ரயில்வே துறை ஒரு சிக்கலான அமைப்பு எனக் கூறிய அமைச்சர், ரயில்கள், நடைமேடைகள் உள்ளிட்ட அனைத்தும் அமைச்சகத்தின் கீழ் உள்ளதாகவும், ரயில்வேயை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதன்பிறகு ரயில்வே துறை மானியக் கோரிக்கை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.

இதேபோன்று ஜெய்ராம் ரமேஷ் கேள்விக்கு பதிலளித்து பேசிய நிதின் கட்காரி, பெட்ரோல், டீசல் என்ஜின் வாகனங்களை நீக்குவதற்காக பழைய வாகனங்களை ஒழிக்கும் கொள்கையை அரசு அறிமுகப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் வாகனங்களை முழுவதுமாக ஒழிப்பதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை என்று கூறிய அமைச்சர், மின்சார வாகனங்களுக்கு மாறுவது மக்களின் இயற்கையான தேர்வாக இருக்கும் என்றும் அடுத்த மூன்று ஆண்டுகளில் பெரியளவில் மாற்றம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, வன உயிரினங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் விதமாக தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related Posts

Leave a Comment