”உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்” – அமெரிக்கர்களுக்கு அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

by Column Editor

போர் ஏற்படவே அதிக வாய்ப்புகள் உள்ளன. ரஷ்யா படைகளை குவித்து வருவதால் யாரும் உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் என ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா போர் வீரர்களை குவித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் அமெரிக்கா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. சோவியத் யூனியனில் அங்கம் வைத்த உக்ரைன் நாட்டில், மக்கள் பேசும் மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை ரஷ்யாவை ஒத்துப் போகும்.

ஆனால், எல்லை பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாடு ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவும் தனது ஆதரவை அளித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை சிறிது சிறிதாக குவித்து வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவைக் கேட்டுக்கொண்ட போதிலும், ரஷ்யா படைக்குவிப்பை நிறுத்தவில்லை.

போர் நடத்துவதற்கு தேவையான சுமார் 70 சதவீத பணிகளை ரஷ்யா செய்து முடித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுப்பதற்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டன. இருப்பினும் தற்போது வரையில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்பும்படி அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நாங்கள் ஒன்றும் தீவிரவாத குழுக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. உலகில் மிகப்பெரிய ராணுவத்தை கொண்டுள்ள நாடான ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மற்ற நடவடிக்கைகளைப் போன்று இதனை நாம் பார்க்க முடியாது. இதன் அடிப்படையில் அமெரிக்கர்களை சொந்த நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா படைகளை அனுப்பாது.

இதில் போர் ஏற்படவே அதிக வாய்ப்புகள் உள்ளன. ரஷ்யா படைகளை குவித்து வருவதால் யாரும் உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அங்கிருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்.’ என்றார்.

பதற்றம் அதிகமானதைத் தொடர்ந்து கடந்த மாதம் 23-ம்தேதி அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். இதற்கிடையே, உக்ரைனின் பக்கத்து நாடான போலந்திற்கு அமெரிக்க 1700 பேர் கொண்ட படையை அனுப்பி வைத்துள்ளது. தொடர்ந்து 1000 பேர் கொண்ட படை ரொமேனியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், நேட்டோ அமைப்புக்காக 8,500 பேர் கொண்ட இன்னொரு படை தயார் நிலையில் உள்ளதென்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment