நியோகோவ் வைரஸை கண்டு பயப்பட வேண்டுமா? உண்மை என்ன? – முழு ரிப்போர்ட் இதோ!

by Column Editor

இன்று உலக நாடுகளை அனைத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வார்த்தை நியோகோவ் (NeoCov). கொரோனாவை விட ஆபத்தான வைரஸ் என சீன ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதே அதற்குக் காரணம். இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் நம்முடன் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறது. அப்பேர்பட்ட கொரோனா வைரஸின் ஆதிமூலம் சீனா தான். தற்போது அங்கே உள்ள ஆராய்ச்சியாளர்களே நியோகோவ் என புதிய வைரஸ் குறித்து கருத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியையும் பீடியையும் ஏற்படுத்தியுள்ளது. நியோகோவ் என்பது கொரோனா வைரஸோ அதன் உருமாற்றமோ கிடையாது.

இது கொரோனா வைரஸின் சகோதரர் என்று வேண்டுமானால் சொல்லலாம். சார்ஸ் கோவிட் வைரஸ் குடும்பங்களில் இதுவும் ஒரு உறுப்பினர். குறிப்பாக MERS-CoV என மனிதர்களைத் தாக்கக் கூடிய வைரஸுக்கு மிகவும் நெருக்கமானது தான் இந்த நியோகோவ். மனிதர்களை தாக்கும் கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருக்கும் ஏழு வைரஸ்களில் ஒன்று தான் மெர்ஸ்-கோவிட். மெர்ஸ்-கோவிட் 2010ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியாவில் வேகமாகப் பரவியது. இந்த வைரஸ் தாக்கிவர்களில் 35 சதவீதம் பேர் உயிரிழந்தனர்.

ஆனால் நியோகோவ் மனிதர்களைத் தாக்குவதில்லை. அது வௌவால்களை தான் தாக்கி வருகிறது. நியோகோவ் ஒன்றும் புதிதாக உருவான வைரஸ் இல்லை. இது ஏற்கனவே முன்னரே கண்டுபிடிக்கப்பட்டு உலக வைரஸ் அட்டவணையில் இடம் பெற்றிருக்கும் வைரஸே. இதனைக் கொண்டு சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி ஒன்று நடைபெற்றது. வௌவால்களின் உடலுக்குள் நியோகோவ் எவ்வாறு நுழைகிறது என ஆராய்ச்சி செய்ததில், ACE2 Receptor என்பதை பயன்படுத்தி நுழைவதை கண்டுபிடித்துள்ளார்கள்.

பின்னர் கொரோனாவை போல இதற்கு மனிதர்களைத் தாக்கும் திறன் இருக்கிறதா எனவும் சோதித்திருக்கிறார்கள். அதில் நியோகோவின் ஒரேயொரு மூலக்கூறு மட்டுமே மனிதர்களுக்குள் பரவுவதிலிருந்து தடுக்கிறது என்பதை உணர்ந்துள்ளார்கள். அந்த மூலக்கூறு ஒருவேளை மாற்றமடைந்தால் மனிதர்களுக்கும் பரவும் என்பதே சீன ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முடிவு. ஒருவேளை அவ்வாறு மாறினால் அதன் தன்மை எப்படி இருக்கும் என்றும் ஆராய்ந்திருக்கிறார்கள். அதற்காக செயற்கையாக இவர்களே அந்த மூலக்கூறை மாற்றியமைத்து சோதித்துள்ளார்கள்.

அந்தச் சோதனையில் தான் இந்த வைரஸ் கொரோனா போல பல மடங்கு வேகமாக பரவும் சக்தி கொண்டது. பெரும் ஆபத்தானதும் கூட. தொற்றுக்கு உள்ளாகும் மூன்றில் ஒருவரின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு சக்தி கொண்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி கூட நியோகோவ் முன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதைத் தான் அவர்கள் உலகிற்கு அறிவித்துள்ளார்கள். ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது ஒரு ஆய்வுக்கட்டுரை மட்டுமே. அதன் முதல் வடிவம் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

நியோகோவின் மூலக்கூறை செயற்கையாக மாற்றிப் பார்த்தது ஒரு டைம் மெஷின் போல. ஒருவேளை உருமாறினால் எப்படி இருக்கும் என்பதை தான் இவர்கள் கண்டறிந்துள்ளார்கள். ஒருவேளை வௌவால்களுக்கு இடையே பரவிக் கொண்டிருக்கும் நியோகோவ் இயற்கையாக உருமாறலாம் அல்லது உருமாறாமல் கூட போகலாம். அது நடக்க இன்னும் எத்தனை வருடங்களாகும் என கூட கணிக்க முடியாது. நடக்காமலும் போகலாம். இயற்கை விட்ட வழி தான். ஏனென்றால் இப்போது பரவி வரும் கொரோனா கூட வௌவால், எறும்புத்திண்ணி வழியாக மனிதர்களிடையே பரவிய ஒன்று தான். ஆகவே நியோகோவ் குறித்து அச்சப்பட எதுவும் தேவையில்லை.

Related Posts

Leave a Comment