அலிபாக் – கவர்ந்திழுக்கும் சிறு நகரம்

by Lifestyle Editor
0 comment

மஹாரஷ்டிராவின்மேற்குக்கடற்கரைப்பகுதியில் கொங்கணப்பிரதேசத்தில் ராய்காட் மாவட்டத்தில் இந்த அலிபாக் நகரம் அமைந்துள்ளது. இது மும்பை மெட்ரோவுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அலி தோட்டப்பூங்காவை குறிப்பிடும்படியாக இது அலிபாக் என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான மா மற்றும் தென்னை மரங்களை இங்கு அலி நட்டதாக சொல்லப்படுகிறது.

இதன் துவக்க வரலாறு 17ம் நூற்றாண்டில் சிவாஜி மஹாராஜாவால் உருவாக்கப்பட்டதிலிருந்து துவங்குகிறது. 1852ம் ஆண்டு இது ஒரு தாலுக்காவாகவும் அந்தஸ்து பெற்றது. அலிபாக் பகுதி பெனி இஸ்ரேலிய யூதர்கள் பல வசிக்கும் பகுதியாகவும் உள்ளது.

வரலாற்றை நோக்கும்போது மராத்தா ராஜாங்கத்தால் இந்தப்பகுதி ஆளப்பட்டதற்கு அடையாளமாக இங்குள்ள கொலாபா கோட்டை விளங்குகிறது. தற்சமயம் சிதிலமடைந்து காட்சியளிக்கும் இந்தக்கோட்டையை அலிபாக் பீச்சிலிருந்து நன்றாக பார்க்க முடியும். அலை இறக்கம் உள்ள நாட்களில் இந்த கோட்டையின் உள்ளே சென்று பார்க்கலாம்.

இங்குள்ள கண்டேரி கோட்டை 3 நூற்றாண்டுகள் பழமையுடைய ஒரு கோட்டையாகும். பேஷ்வா வம்சத்தினரால் கட்டப்பட்ட இது பின்னாளில் ஆங்கிலேயர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கானேஷ்வர் மற்றும் சொமேஷ்வர் கோயில்கள் இங்குள்ள முக்கியமானஆன்மீக சின்னங்களாகும்.

இந்த இரண்டு கோயில்களுமே சிவ பெருமானுக்காக கலையம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சிறிய நகரம் தற்சமயம் பல தொழில் மையங்களை பெற்று எளிமையான பண்ணைகளையும், சிறிய வீடுகளையும் கொண்டிருந்த அதன் பழைய இயல்புக்கு முற்றிலும் மாறுபட்ட மாற்றங்களுக்கு அல்லது வளர்ச்சிக்கு உட்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவின் ‘கோவா’ அலிபாக்கின் நான்கு எல்லைப்புறங்களில் மூன்று கடல் நீரினால் சூழப்பட்டுள்ளதால் பல அழகிய கடற்கரைகளை இது பெற்றுள்ளது. இங்குள்ள எல்லா கடற்கரைகளுமே தென்னை மரங்களுடனும், பாக்கு மரங்களுடனும் காணப்படுவதால் ஒரு பாலைவனப்பிரதேச கடற்கரை போன்று வித்தியாசமான இயற்கை எழிலுடன் காட்சியளிக்கின்றன.

இயற்கை அதன் மிக அற்புதமான தோற்றத்துடன் களங்கமற்ற ஆதி அழகுடன் அலிபாக் கடற்கரையில் மிளிர்கிறது. இங்கு நீங்கள் சுவாசிக்கும் காற்று மாசற்ற தூய்மையுடன் காணப்படுகிறது. சுருக்கமாக அலிபாக் கடற்கரைகளை பூலோக சொர்க்கம் என்றே சொல்லலாம்.

தன் கருப்பு நிற மணற்பரப்பால் உங்களை திகைப்பூட்டும் அலிபாக் கடற்கரை ஒரு புறமிருக்க, கிஹிம் பீச் மற்றும் நகவான் கடற்கரைகள் வெள்ளியைப்போல் ஒளிரும் வெள்ளை மணலால் பயணிகளைக் கவர்கின்றன. இவை தவிர அக்‌ஷி கடற்கரை என்று அழைக்கப்படும் மற்றொரு கடற்கரையும் இங்குள்ளது.

பல விளம்பரப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும், சினிமாப்படங்களும் இங்கு படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் பல பாலிவுட் திரைப்பிரபலங்கள் இந்த கடற்கரைப்பகுதியில் பண்ணை வீடுகளையும் ஆடம்பர சொகுசு பங்களாக்களையும் கொண்டுள்ளதால் அவர்களில் யாரையாவது இங்கு நீங்கள் பார்க்கவும் வாய்ப்புண்டு.

அலிபாக் ஒரு கடற்கரை நகரம் என்பதால் இங்கு கிடைக்கும் உணவு வகைகள் யாவுமே கடல் உணவு வகைகளாகவே உள்ளன. பாம்ஃபிரட் மற்றும் சுர்மை உணவுத்தயாரிப்புகளுடன் சொல் காதியும் இங்கு புகழ் பெற்ற உணவாக உள்ளது. நேசத்திற்குரிய துணையுடன் இன்பமாக, ஏகாந்தமாக தனிமையில் பொழுதைக் கழிப்பதற்கேற்ற இயற்கை ஸ்தலமாக அலிபாக் கடற்கரைப்பகுதி அறியப்படுகிறது.

பீச்சில் காலார நடப்பதற்கோ, கடலலைகளில் விளையாடுவதற்கோ அல்லது அமைதியாக சூரியன் கடலில் சென்று மறைவதை பார்த்து ரசிக்கவோ அலிபாக் பகுதி பொருத்தமான இடமாகும். அலிபாக்கிற்கு எப்படி எப்போது விஜயம் செய்யலாம்? அலிபாக் பகுதியில் எப்போதுமே விரும்பத்தக்க சிதோஷ்ண நிலை நிலவுகிறது.

இங்கு அதிக உஷ்ணமோ அல்லது அதிக குளிரோ நிலவாமல் மிதமான இனிமையான சூழல் காணப்படுகிறது. இந்தியாவின் மற்ற பிரதேசங்களைப் போன்று இங்கு கோடைக்காலம் மிகுந்த வெப்பத்துடன் காணப்படுவதில்லை. கோடையில் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 36°C மட்டுமே காணப்படுகிறது. மழைக்காலத்தில் இப்பிரதேசத்தின் அழகு ரசிக்கும்படியாக இருந்தாலும் சுற்றிப்பார்ப்பதற்கு சற்று சிரமமாக இருக்கலாம்.

மழைக்காலத்தில் எல்லாமே கொள்ளை அழகு என்பதால் நீங்கள் விரும்பினால் உங்கள் சொந்த முடிவில் மழைக்காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்ளலாம். (வெளியில் எங்கும் போகமுடியாமல் அறையிலேயே முடங்கிக்கிடக்கக்கூடிய அவசியம் வந்தாலும் எதிர்கொள்ளும் மனநிலையுடன்). இருப்பினும் அலிபாக் பகுதியை சுற்றிப்பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் ஏற்ற காலம் என்றால் அது குளிர்காலம் தான்.

அச்சமயத்தில் சீதோஷ்ண நிலை மிக இதமாகவும் மிதமாகவும் சூழல் இனிமையாகவும் காணப்படுகிறது. இது உங்கள் பயண அனுபவத்தை மறக்க முடியாத மிகவும் இனிமையான அனுபவமாக மாற்றும். கொண்டாட்ட காலமான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தருணங்களில் இங்கு வருகை தருவதும் சிறந்தது.

அலிபாக் மும்பையிலிருந்து வெறும் 30 கி.மீ தூரத்திலேயே அமைந்திருப்பது ஒரு சிறப்பு. விமானம், ரயில், சாலை என்று எப்படி வேண்டுமானாலும் அலிபாக் பயணத்திற்கு திட்டமிட்டுக்கொள்ளலாம். விமான மார்க்கம் என்றால் மும்பை சர்வதேச விமானம் அருகிலேயே உள்ளது.

ரயிலில் வர விரும்பினால் பென் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. அரசுப்பேருந்துகளும் தனியார் சொகுசுப்பேருந்துகளும் மஹாராஷ்டிராவின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மற்றும் அண்டை மாநில நகரங்களிலிருந்தும் இயக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் விட ஒரு மறக்க முடியாத பயண அனுபவத்தை பெற மும்பை ஜெட்டியிலிருந்து அரபிக்கடல் வழியாக ‘ஃபெர்ரி’ சேவை மூலம் அலிபாக்கிற்கு பயணம் செய்யலாம்.

ஒரு வார இறுதி விடுமுறையை அலிபாக் பகுதியில் கழிக்கும் அனுபவம் எந்த விதமான சுற்றுலாப்பயணியின் சுற்றுலா வேட்கைக்கும் தீனி போடக்கூடியதாகும். பரிசுத்தமான கடற்கரைகள், வரலாற்றுக்கோட்டைகள், தொன்மையான கோயில்கள் இவற்றுக்கிடையே இந்த சிறிய நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மஹாராஷ்டிராவின் கோவா என்றழைக்கப்படும் இந்த அலிபாக் கடற்கரை ரசிகர்களுக்கான ஒரு விருப்ப நகரமாக உருவாகியுள்ளது. இன்னும் காலத்தைக் கடத்தாமல் உங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு ஒரு வார இறுதி விடுமுறையை அலிபாக்கில் கழிக்கப் புறப்படுங்கள். வாழ்நாள் முழுவதும் இந்த சிறு கடற்கரை நகரம் அளித்திட்ட பரவசத்தை உங்களால் மறக்கவே முடியாது.

Related Posts

Leave a Comment