முடி அடர்த்தியா, செழித்து வளர வேண்டுமா? இதோ இயற்கை வைத்தியம்

by Column Editor

பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை.

முடி உதிர்தலை முக்கியமான பிரச்சனையாகப் பலரும் நினைக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் முடிக்கற்றைகள் உள்ளன. தினமும் ஒருவருக்கு 100 முடிகள்வரை உதிர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

முடி உதிர்தல் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. அதுவே அவர்களுக்கு நாளடைவில் மனஅழுத்தத்தை உண்டாக்கும். சில இயற்கை வைத்திய குறிப்புகளை பயன்படுத்தி முடி உதிர்தல் பிரச்சனையை போக்கலாம்.

அடர்த்தியான முடி வளர இதோ இயற்கை வைத்தியம் –

மருதாணி

மருதாணி கொழுந்தய் நன்றாக அரைத்து சின்ன சின்ன பிஸ்கட்டுகளாக தட்டி காய வைத்து தேங்காய் எண்ணெய்யில் 2 அல்லது 3 நாட்கள் நன்றாக ஊறவைத்து அதை நன்கு சூடாக்கி தலைக்கு பூசினால் நீளமான அடர்த்தியான தலைமுடி பெறலாம்.

செம்பருத்தி, ரோஜா

செம்பருத்தி, கறிவேப்பிலை, மருதாணி, ரோஜா இதழ்கள் இந்த நான்கையும் வெயிலில் நன்றாக காயவைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு சூடான தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து நன்கு ஊற வைத்து தலைமுடியில் தேய்க்கவும் இப்படி தினமும் பூசி வர தலைமுடி கொட்டுவது முற்றிலும் குறையும்.

முட்டை

முட்டையின் வெள்ளைக்கரு-மருதாணி இலை- செம்பருத்தி இலை- பூ- போன்றவற்றை சேர்த்து தலையில் பூசி 30 நிமிடத்துக்கு ஊறவைத்து கழுவினால் தலைமுடி கருமையாக நிறத்துடன் அடர்த்தியாக வளரும்.

வெண்ணெய்

முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

வெங்காயம், தயிர்

கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

வெந்தயம்

வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.

செம்பருத்தி இலை

செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

Related Posts

Leave a Comment