இலங்கை போர் தொடர்பாக பிரித்தானியா விடுத்துள்ள வேண்டுகோள்!

by Editor News

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது, இடம்பெற்ற போர் குற்ற சம்பவங்கள் குறித்து இதுவரை தெரிவிக்கப்படாத தகவல்களை கொண்டிருப்பவர்கள், பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பிரித்தானிய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர், தங்கள் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொமாண்டர் டொமினிக் மர்பி (Commander Dominic Murphy) தெரிவித்துள்ளார்.

தமது விசாரணையின் ஒரு பகுதியாக தற்போது இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும், இந்த மிகக் கடுமையான குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகளின் முன்னேற்ற செயற்பாடுகளின் அடையாளமாக இது கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தகவலை வழங்க போர் குற்றங்கள் குழுவின் மின்னஞ்சல் முகவரியான SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk. அனுப்பி வைக்க முடியும் எனவும் அல்லது +44 (0)800 789 321 என்ற இலக்கங்களின் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் 2023ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதியன்று தெற்கு லண்டனில் உள்ள முகவரியில் 60 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment