கோடையில் பித்தம் அதிகரித்து உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.. உடலை குளிர்ச்சியாக்க என்ன செய்வது?

by Lifestyle Editor

ஆயுர்வேதத்தின் படி உடல் வாதம், பித்தம், கபம் மூன்றையும் உள்ளடக்கியது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தோஷம் சற்று அதிகமாக இருக்கலாம். அதே போன்று பருவகாலங்கள் தோஷங்களை அதன் அளவை மாற்றக்கூடியது. கோடையில் கபம் அதிகமாக குறையும். இதனால் வாதம் அதிகரிக்கும். மேலும் வெப்ப உறுப்பை குறிக்கும் பித்தம் கோடையில் மோசமடையும். கோடை காலம் வந்தாலே வெயிலின் தாக்கம் இன்னும் உடலை மோசமாக்கும். இந்நிலையில் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைக்க ஆயுர்வேதம் சொல்லும் வழிமுறைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

​நீரேற்றமாக இருப்பது குளிர்ச்சியாக உணர வைக்கும்​ :

கோடைக்காலங்களில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்ச்சியாக ஃப்ரிட்ஜ்ஜில் இருந்து குடிக்காமல் சாதாரணமான அல்லது வெதுவெதுப்பான நீர் குடிக்கவும். உடல் தாகம் எடுக்கும் வரை காத்திராமல் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். இதனால் உடல் உறுப்புகளுக்கு ஆற்றலும் செல்களுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும். தண்ணீருடன் நீர், இளநீர், புதினாவுடன் எலுமிச்சை நீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். சூடான பானங்கள் தவிருங்கள். சூடான நீர் குளியல் தவிருங்கள்.

உடல் குளிர்ச்சிக்கு பித்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்​ :

பித்தம் கோடையில் அதிகரிக்கும் என்பதால் பித்தத்தை அமைதிப்படுத்தும் உணவுகளை எடுத்துகொள்ளுங்கள். குளிர்ச்சியான பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்க்கலாம். உடல் குளிர்ச்சிக்கு ஐஸ் கட்டி பயன்படுத்துவது வயிற்றில் செரிமான அமைப்பு குறைத்து, அமா என்னும் நச்சுக்களையே உருவாக்கும். ஆயுர்வேதம் குளிர்ச்சியாக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட பரிந்துரைக்கிறது.

புதினா, கொத்துமலி, வெள்ளரி, சீமை சுரைக்காய், முட்டைக்கோஸ், வெந்தயம், பெருஞ்சீரகம், பெர்ரி பழங்கள், தர்பூசணி போன்றவற்றை சேர்க்க அறிவுறுத்துகிறது.

வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகள் தவிருங்கள்​ :

பருவகாலத்துக்கேற்ப உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும். கோடையில் பசி எடுக்காமல் இருக்கும் என்றாலும் தாகமாக உணர்வீர்கள். அதனால் சூப் வடிவில் உணவுகளை எடுத்துகொள்ளலாம். இலகுவான உணவுகள் செரிமானத்தை எளிதாக்க உதவும். உடல் ஏற்கனவே சூடான வெப்பநிலையில் சோர்வடையும் நிலையில் கனமான உணவுகள் மேலும் சோர்வை உண்டு செய்யலாம். அதோடு கனமான உணவுகள் ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படலாம். கோடையில் இனிப்பு, கசப்பு மற்றும் புளிப்பு உணவுகளை சேருங்கள்.

கோடைக்காலத்தில் உணவுகளை தவிர்ப்பது தோஷத்தை அதிகரிக்கும்​ :

எந்த வேளை உணவையும் தவறவிடாதீர்கள். உணவை தவிர்ப்பது பித்த தோஷம் கூடுவதற்கான வழியாக இருக்கும். அதனால் வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பதை தவிருங்கள். உணவு சீரான இடைவெளியில் எடுத்துகொள்ளுங்கள். இல்லையெனில் இது அமிலத்தன்மை, செரிமான பிரச்சனைகள், தலைவலி மற்றும் உடல் வெப்பநிலை அதிகரிப்பு போன்றவற்றை உண்டு செய்யும்.

கோடையில் உடலை குளிர்விக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள் :

உடலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது உடலை குளிர்விக்க உதவும். தினமும் குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கவும். இதனால் உடல் எண்ணெயை உறிஞ்சும். இது உடல் வெப்பத்தை குறைக்க பயனுள்ளதாக இருக்கும்.

கோடை வெப்பத்தை தவிர்க்க சரியான தூக்க முறையை பின்பற்ற வேண்டும்​ :

சுறுசுறுப்பான மூளைக்கு உணவு மட்டும் போதாது. தூக்கமும் அவசியம். தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்குங்கள். சோர்வு அதிகம் இருந்தால் பகலில் ஒரு சிறிய தூக்கம் புத்துணர்ச்சியாக வைத்திருக்க செய்யும். மறுநாள் பகல் நேரத்தில் 20 நிமிடங்கள் தூங்குவது சோர்வில்லாமல் வைத்திருக்கும்.

கோடைக்காலத்தில் எந்த உடற்பயிற்சிகள் நல்லது​ :

இலேசான வழக்கமான உடற்பயிற்சிகள் செய்யலாம். நீச்சல் , சைக்கிள் ஓட்டுவது, நடைபயிற்சி போன்றவை. தியானம் மற்றும் சுவாச பயிற்சிகள் செய்யலாம். வெப்பமான காலத்தில் வாதம் மற்றும் பித்த தோஷத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் கவலையை உண்டு செய்யும். பித்த தோஷம் மற்றும் மூளையை அமைதிப்படுத்த தியானம் மற்றும் பிராணயாமா பயிற்சி செய்யுங்கள்.

​கோடைக்கால ஆடைகள் எப்படி இருக்க வேண்டும்?​

பருத்தி மற்றும் வெளிர்நிற ஆடைகள் அணிவது உடலில் இருந்து வியர்வையை உறிஞ்ச உதவும். வெளிர் நிற ஆடைகள் வெப்பத்தை உள்ளுக்கு கடத்தாது. வெயிலில் செல்லும் பொது தளர்வான பருத்தி மற்றும் வெளிர் நிற ஆடைகள் உடலை பாதுகாக்க செய்யும்.

கோடைக்கால உஷ்ணத்தை குறைக்க வெயில் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம். பகல் நேரங்களில் வீட்டுக்குள் இருப்பது நல்லது. வெளியில் செல்வதற்கு அதிகாலை அல்லது மாலை நேரங்களில் வெளியே செல்வது நல்லது. அதே போன்று தலைக்கு தொப்பி அல்லது குடையை எடுத்து செல்லுங்கள்.

Related Posts

Leave a Comment