குழந்தைகள் வளரும் போது தாய்ப்பாலுக்கு பிறகு திரவ உணவுகள் பழகும் போது பழங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பழங்களில் முதலில் வாழைப்பழத்தில் தொடங்குவதுண்டு. படிப்படியாக இதர பழங்களையும் பழகும் போது பருவ கால பழங்களையும் சேர்ப்போம். அவற்றில் தர்பூசணிப்பழத்தை குழந்தைக்கு எப்படி எப்போது கொடுப்பது என்பதை பார்க்கலாம்.
குழந்தைக்கு தர்பூசணி எப்போது கொடுக்கலாம்?
குழந்தைக்கு தர்பூசணி அறிமுகப்படுத்தும் போது அவர்களால் ஜீரணிக்க முடியுமா என்ற கவலை இருக்கும். ஏனெனில் குழந்தையின் செரிமான மண்டலம் விரிவடைய சில காலம் ஆகலாம். மேலும் குழந்தையின் வயிறு மென்மையானது என்பதால் குழந்தை எடுக்கும் உணவுகள் பலவற்றை ஒரு வருடம் வரை அறிமுகப்படுத்த கூடாது. ஆனால் தர்பூசணி அப்படி அல்ல நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு பட்டியலில் முதன்மை இடங்களிலேயே தர்பூசணியை வைத்திருக்கலாம்.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கூற்றுப்படி குழந்தைக்கு அறு மாதங்களுக்கு பிறகு சுத்தமான பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட திட உணவுகள் அறிமுகப்படுத்த பரிந்துரைக்கிறது. உண்மையில் தர்பூசணி நல்ல உணவு. மென்மையானது. நீர்ச்சத்து நிறைந்தது என்பதால் குழந்தை விழுங்குவதிலும் கடுமையாக இருக்காது.
தர்பூசணியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :
தர்பூசணி 100 கிராம் அளவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்
தண்ணீர் – 91.45 கி
கலோரி – 30
ஆற்றல் – 127
புரதம் – 0.61
கார்போ ஹைட்ரேட் – 7.55
நார்ச்சத்து – 0.4
சர்க்கரை – 6.20
கால்சியம் – 7 கி
இரும்புச்சத்து – 0.24 கிராம்
பாஸ்பரஸ் – 11 மிகி
மெக்னீசியம் – 10 மிகி
துத்தநாகம் -0.10மிகி
பொட்டாசியம் – 112
சோடியம் – 1மிகி
வைட்டமின் சி -8.1 மிகி
வைட்டமின் ஏ – 569 IU
ஃபோலேட் – 3 மைக்ரோகிராம்
லைகோபீன் – 4532
தர்பூசணி கொடுப்பதால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் :
குழந்தைகளுக்கு தர்பூசணி நன்மைகள் :
நீரேற்றம் – தர்பூசணி நீர் சமநிலையை பராமரிக்கிறது. இதில் 93% நீர்ச்சத்து உள்ளது. உடலுக்கு நீரேற்றம் அளிக்கிறது. இது கோடை காலத்தில் நீர்ச்சத்து குறைவதை தடுக்கிறது.
எலக்ட்ரோலைட்டுகள், சோடியம் மற்றும் பொட்டாசியம் வெப்ப பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்க செய்கிறது. தர்பூசணி பழுக்கும் போது லைகோபீன் என்ற ஆன் டி ஆக்ஸிடண்ட் அதிகரிக்கிறது.
தர்பூசணியில் லுடின், பைட்டோஃப்ளூயின், பைட்டோன் மற்றும் பீட்டா கரோட்டின், நியூரோஸ்போரின் மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. இது கண் பார்வையை மேம்படுத்தும். இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்யும்.
தர்பூசணி வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது தொற்றுநோயை தடுக்க செய்கிறது. இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. வைட்டமின் ஏ பற்கள் மற்றும் சளி சவ்வு ஆகியவற்றை வலுப்படுத்த உதவுகிறது.
தர்பூசணியில் கால்சியம் மற்றும் மாங்கனீசு உள்ளது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஹார்மோன் சுரப்புக்கு கால்சியம் அவசியம். மெக்னீசியம் குழந்தைகளின் தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை உருவாக்க உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது. தர்பூசணி ஒரு சுவையான கோடைக்கால பழம் மட்டும் அல்ல எளிதில் ஜீரணிக்க கூடிய ஒன்று. நார்ச்சத்து நிறைந்த இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்கிறது. மலச்சிக்கலை தடுக்கிறது.
குழந்தைக்கு தர்பூசணி எப்படி கொடுப்பது?
குழந்தை உணவை விழுங்கும் வயதில் இருந்தால் குழந்தைக்கு தர்பூசணி கீற்றுகள் அளிக்கலாம். ஆனால் சிறியதாக நறுக்கி கொடுக்கவும். வாய்வழி இயக்கத்தை செயலாக்காத குழந்தைகள் எனில் இது இருமல் மற்றும் மூச்சுத்திணறலை ஏற்படுத்த செய்யும்.
குழந்தைகளுக்கு தர்பூசணி கொடுக்கும் போது விரல் அளவு என நீள்வாக்கில் நறுக்கி கொடுக்க வேண்டும். இது குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும்.
குழந்தைகள் மெல்ல முடியாத நிலையில் அதை மசித்து பூரியாக கொடுக்கலாம். அல்லது தோல் மற்றும் கொட்டை நீக்கி சாறாக மசித்து வடிகட்டி கொடுக்கலாம்.
குழந்தைக்கு தர்பூசணி பக்கவிளைவுகள் உண்டு செய்யுமா?
பெரும்பாலும் இது ஒவ்வாமை உண்டு செய்யாது. எனினும் இதில் உள்ள அமிலத்தன்மை காரணமாக சில குழந்தைகளுக்கு தர்பூசணி சாப்பிடுவதால் சொறி உண்டாகலாம். இதனால் வயிற்றுப்போக்கு, மூக்கு ஒழுகுதல், வாந்தி போன்றவை உண்டாகும். சில நேரங்களில் இது அமிலத்தன்மையை உண்டு செய்யும். இதில் இருக்கும் பிரக்டோஸ் குழந்தையின் இரைப்பை குடல் அமைப்பை முழுமையாக உறிஞ்சப்படாமல் போகலாம்.