முதலீட்டாளர்களை கை தூக்கி விட்டதா?.. கை விட்டதா?.. 2022 …

by Lifestyle Editor

2022ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி தலா 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.16.45 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, நம் நாட்டில் சில்லரை விலை பணவீக்கம் பல மாதங்களாக உயர்ந்து இருந்தது, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி உயர்வு நடவடிக்கை, உலக பொருளாதார மந்தநிலை குறித்த பயம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி, அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டை திரும்ப பெற தொடங்கியது, சீனா மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது போன்ற பாதகமான அம்சங்கள் நிலவிய போதிலும், 2022ம் ஆண்டில் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கியது, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியது போன்றவை பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு வழி வகுத்தது. 2022ம் ஆண்டில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 4.4 சதவீதம் அதிகரித்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 4.3 சதவீதம் உயர்ந்தது.

குறிப்பாக தேசிய பங்குச் சந்தையின் 26 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து ஏழாவது முறையாக நிப்டி உயர்ந்துள்ளது. 2022ம் ஆண்டில் எல்.ஐ.சி. உள்பட மொத்தம் 33 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கி மொத்தம் ரூ.55,145 கோடி திரட்டின. 2022ம் ஆண்டின் இறுதி வர்த்தக தினமான நேற்று (டிசம்பர் 30) மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.282.45 லட்சம் கோடியாக இருந்தது. 2021 டிசம்பர் 31ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.266 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, 2022ம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.16.45 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

Related Posts

Leave a Comment