அடி தூள்… 64 பந்தில் 154 ரன்கள்.. ஸ்டேடியத்தை சும்மா தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்

by Column Editor

பிக்பேஷ் லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக 64 பந்தில் 154 ரன்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறார் க்ளென் மேக்ஸ்வெல்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

முதலில் பேட்டிங் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரரான க்ளென் மேக்ஸ்வெல் காட்டடி அடித்தார். பவுண்டரிகளாக விளாசிய மேக்ஸ்வெல் 41 பந்தில் சதமடித்தார். அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஜோ க்ளார்க் 18 பந்தில் 35 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

3ம் வரிசையில் இறங்கிய நிக் லார்கின் 3 ரன்னுக்கு வெளியேறி விட்டார். இதனையடுத்து, மேக்ஸ்வெல்லுடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸும் அடித்து ஆடினார். சதமடித்த மேக்ஸ்வெல் அதன் பின்னரும் அடி நொறுக்கினார். ஸ்டோய்னிஸும் காட்டடி அடித்து 31 பந்தில் 75 ரன்கள் அடிக்க, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவரில் 273 ரன்களை குவித்தது.

மேக்ஸ்வெல் 64 பந்தில் 22 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 154 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று ஆடினார். இதுதான் பிக்பேஷ் லீக்கில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர்.

பிக்பேஷ் லீக் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை அடித்து சாதனை படைத்துள்ளார் மேக்ஸ்வெல். இதற்கு முன்பு மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடித்த 147* ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

ஸ்டோய்னிஸின் சாதனையை மேக்ஸ்வெல் தகர்த்தபோது, ஸ்டோய்னிஸ் மறுமுனையில் தான் நின்றார். இப்போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அடித்த 273 ரன்கள் தான் பிக்பேஷ் லீக்கில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராகும்.

டி20 கிரிக்கெட்டில்(சர்வதேச டி20 மற்றும் டி20 லீக்குகள்) ஒரு அணி அடித்த 3வது அதிகபட்ச ஸ்கோராகும். மேக்ஸ்வெல் செம ஃபார்மில் அடித்து ஆடி வருவதுடன், சாதனை சதம் விளாசியிருப்பதால், ஐபிஎல்லில் அவர் ஆடும் ஆர்சிபி அணி செம குஷியில் இருக்கிறது.

ஆர்சிபி ரசிகர்களும், மேக்ஸ்வெல் அதே அதிரடியை ஐபிஎல்லில் தொடர்வார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

Related Posts

Leave a Comment