சிறிய இடத்தில் தோட்டம் அமைப்பதற்கான சில டிப்ஸ்…

by Editor News

வீட்டிற்கு அழகு சேர்க்கும் ஒரு அங்கமாக விளங்குவது தான் தோட்டம். பெரிய வீட்டில் பார்த்தால் தோட்டத்திற்கென்று ஒரு பெரிய இடம் ஒதுக்கி, அதை பராமரிக்க தனியாக வேலையாட்களும் இருப்பர். அப்படியானால் சின்னதாக வீடு வைத்திருப்பவர்களுக்கு தோட்டம் என்பது வெறும் கனவு தானா? என்று நினைக்கலாம். அது தான் இல்லை. தோட்டம் என்றால் பெரிய இடத்தில் தான் போட முடியும் என்றில்லை. கிடைத்த சின்ன இடத்தில் கூட தோட்டத்தை உருவாக்கலாம்.

சிறிய இடத்தில் அமைத்த சின்ன தோட்டம் கூட பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஒவ்வொருவரும் அவர்களின் இட வசதிக்கேற்ப தங்களின் தோட்டத்தை அமைத்துக் கொள்கின்றனர். அது ஜன்னலருகே இருக்கும் இடமாகட்டும் அல்லது வீட்டின் உள்ள முற்றமாகட்டும்.

பெரிய இடத்தில் தோட்டம் அமைப்பது என்பது ஒரு வகையில் ஒரு புதிர் தான். நடக்கும் தவறு எதனால் ஏற்படுகிறது என்ற குழப்பம் நிலவும். ஆனால் சிறிய இடத்தில் போடும் தோட்டத்தில் எந்த வகையான தவறும் நடக்க வாய்ப்பில்லை. தவறாக நட்ட செடி கூட, சிறு தோட்டத்தில் பார்க்க அழகாகத் தான் தெரியும்.

அதற்கு முதலில் யோசிக்க வேண்டியது கிடைத்த சிறு இடத்தை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றித் தான். மிகவும் சின்ன இடம் என்பதால் ஒரு மேஜையும், கொஞ்சம் நாற்காலிகளும் போடுமளவுக்குத் தான் இடம் இருக்கும். அப்படி தேவையில்லாமல் இருக்கும் சிறு இடங்களை, வீட்டினுள் இருந்து பார்க்கும் போது ஒரு ஓவியத்தைப் போல் அழகாக தெரிந்தால் எப்படி இருக்கும்?

பெரும்பாலும் சிறு தோட்டம் அமைக்கும் போது சவாலான விஷயமாக இருப்பது, தோட்ட எல்லைகளின் நெருக்கம். இது பெரும்பாலும் அசிங்கமாகவே அமையும். இந்த குறையையே நிறையாக மாற்றலாம் தெரியுமா? எப்படியெனில், இந்த எல்லைகளை சுற்றி கொடிகளை படர விடலாம். தோட்டத்தில் உள்ள செடிகளின் பெரிய இலைகளுக்கு முன் இருக்கும், இந்த கொடிகளின் சிறு இலைகள் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கும். இல்லையெனில், தோட்டத்தில் உள்ள வேலிக்கு கருப்பு நிறத்தில் வர்ணம் பூசலாம். இது கேட்பதற்கு விநோதமாக இருந்தாலும், பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். வேண்டுமெனில், கிரீன் வால் என்ற வேலி வகையையும் அமைக்கலாம். இது கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தாலும் செடிகள் நன்கு வளர உதவி புரியும்.

சரி இப்போது இணைப்பைப் பற்றி யோசிக்கலாமா? உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மஞ்சள் நிற இலைகளைக் கொண்ட மரங்களை வளர்த்துள்ளாரா? அப்படியானால் நீங்களும் மஞ்சள் நிற இலைகளை கொண்ட செடிகளை தோட்டத்தில் வளர்த்து வரலாம். அப்படிச் செய்தால், வீட்டிற்குள் இருந்து பார்க்கும் போது உங்கள் சிறிய தோட்டம் கூட பெரியதாக தெரியும்.

தோட்டம் அமைக்கும் திட்டம் எளிமையாக இருக்க வேண்டும். இந்த எளிமை குறைய குறைய, சிக்கல்கள் அதிகமாகும். அழகும் குறைந்து கொண்டே போகும். தோட்டத்துக்கு தேவையான பொருட்களையும், செடிகளையும் குறைந்த அளவிலேயே தேர்ந்தேடுக்க வேண்டும். வீட்டையும், தோட்டத்தையும் இணைக்க ஒரு பாதையை உருவாக்கி, அந்த பாதையில் வீட்டில் உள்ள தரையை போலவே மரப்பாதை, சிமெண்ட் அல்லது டைல்ஸ் போட்டு அழகை கூட்டலாம். இப்படி செய்தால் இந்த இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கும், மேலும் தோட்டத்து எல்லைகள் தெளிவில்லாமலும் போய்விடும்.

வேண்டுமானால் இந்த இடத்தை பெரிய பொருட்களால் நிரப்பி, மேலும் அழகைச் சேர்க்கலாம். உதாரணத்திற்கு, ஒரு பெரிய சிலையையோ அல்லது மேஜை நாற்காலிகளையோ போடலாம். இது இன்னும் மெருகேற்றும் வகையில் அமையும். இருப்பினும், செடிகளை கவனமாக தேர்ந்தேடுங்கள். ஏனெனில் இருப்பதிலேயே சின்ன மரம் தான் வெகு விரைவில் 6 மீட்டர் உயரமும், 4 மீட்டர் அகலத்திலும் வளரும். அதனால் பராமரிப்பது கடினமாகும். எனவே செடிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனம் தேவை.

Related Posts

Leave a Comment