சவாய் மாதோபூர் – ஈர்க்கும் இடங்கள்

by Lifestyle Editor

சவாய் மாதோபூர் எனும் இந்த சிறிய நகரம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரிலிருந்து 154 கி.மீ தூரத்தில் உள்ளது. இது சம்பல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 18ம் நூற்றாண்டில் ஜெய்பூரை ஆண்ட மன்னர் முதலாம் சவாய் மாதோ சிங் மஹாராஜாவின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

இந்த நகரம் தனது கடந்த காலத்தில் மாறி மாறி வந்த பல ராஜ வம்சங்களின் ஆட்சிகளை பெற்றுள்ளது. முதலில் இது சௌஹான் வம்ச மன்னரான ராஜா ஹமீர் தேவ் என்பவரின் ஆட்சியில் இருந்துள்ளது. பின்னர் அல்லாவுதீன் கில்ஜியின் படைகளால் இது கைப்பற்றப்பட்டு மொத்த நகரமும் சிதைக்கப்பட்டிருகிறது. தற்சமயம் சவாய் மாதோபூர் நகரம் பல முக்கியமான வரலாற்றுச் சின்னங்களுக்கும் சுற்றிலுமுள்ள இயற்கை ஸ்தலங்களுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. அருகிலுள்ள ரன்தம்போர் தேசியப்பூங்கா மற்றும் 11கி.மீ தூரத்திலுள்ள ரன்தம்போர் கோட்டை ஆகியன இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

இந்த நகரில் வரலாற்று, தொல்லியல் மற்றும் ஆன்மீக அம்சங்கள் சார்ந்த இடங்களும், ரன்தம்போர் தேசியப்பூங்கா, சவாய் மான் சிங் சரணாலயம் மற்றும் ராமேஷ்வரம் காட் போன்ற இயற்கைச்சுற்றுலா ஸ்தலங்களும் காணப்படுகின்றன. ரன்தம்போர் கோட்டை, ஹந்தர் கோட்டை மற்றும் சமிட்டோன் கி ஹவேலி ஆகியவை இங்குள்ள முக்கியமான வரலாற்று ஸ்தலங்களாகும். சவாய் மாதோபூர் நகரம் ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட பல கோயில்களையும், சிறு சன்னதிகளையும் கொண்டுள்ளது. இவற்றில் அமரேஷ்வர் மஹாதேவ் கோயில், சமத்கர்ஜி ஜெயின் கோயில், கைலா தேவி கோயில், சௌத் மாதா கோயில் மற்றும் புகழ்பெற்ற ஸ்ரீ மஹாவீர்ஜி கோயில் ஆகியவை முக்கியமான கோயில்களாகும். இவை யாவும் பயணிகளை அக்கால இந்தியாவின் மஹோன்னத தரிசனத்துக்கு இழுத்து செல்கின்றன. மேலும் ராஜஸ்தானிய மண்ணின் செழுமையான பாரம்பரியத்தையும் இவை பிரதிபலிக்கின்றன. சவாய் மாதோபூர் நகரமானது ராஜஸ்தானின் இதர முக்கிய நகரங்களான டௌசா, டோங்க், பூந்தி மற்றும் கரௌலி போன்ற நகரங்களுக்கு அருகாமையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நகரங்கள் யாவுமே அங்குள்ள தனித்தன்மையான வரலாற்று மற்றும் ஆன்மீகஸ்தலங்களுக்கு புகழ்பெற்று விளங்குகின்றன.

திருவிழாக்கள், சந்தைகள் மற்றும் உணவுவகைகள்

சவாய் மாதோபூர் பிரதேசத்தின் உள்ளூர் பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை தெளிவாக அறிந்து கொள்ள இங்கு நடைபெறும் சந்தைகளுக்கு விஜயம் செய்தாலே போதுமானது. ஒவ்வொரு வருடமும் இங்குள்ள கோயில்கள் மற்றும் ஆன்மீகத்தலங்களில் இவை நடத்தப்படுகின்றன. மேலும், கொய்யாப்பழங்களுக்கு சவாய் மாதோபூர் நகரம் மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது. தனித்தன்மையான சுவையைக் கொண்ட இவை ‘மாதோபூர் கொய்யா’ என்றே அழைக்கப்படுகின்றன. பாரம்பரிய நடன பாணிகளுக்கும் இப்பகுதி புகழ் பெற்றுள்ளது. சவாய் மாதோபூர் நடனம், கூமார் நடனம் மற்றும் கல்பெலியா நடனம் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. பயண வசதிகள் எல்லா இந்திய நகரங்களுடனும் சாலை மற்றும் ரயில் வசதிகளால் சவாய் மாதோபூர் இணைக்கப்பட்டுள்ளது. விமான மார்க்கமாக செல்ல விரும்பும் பயணிகளுக்கு இங்கிருந்து 154 கி.மீ தூரத்தில் ஜெய்ப்பூர் நகர விமான நிலையம் உள்ளது. பருவ நிலை சவாய் மாதோபூர் பிரதேசம் மித வெப்ப மண்டல பருவ நிலையைக் கொண்டுள்ளதால், வெப்பமான, வறண்ட கோடை காலத்தையும், ஈரப்பதம் மற்றும் வெப்பத்துடன் கூடிய மழைக்காலத்தையும் பெற்றுள்ளது. குளுமையும், இதமான சூழலும் நிலவும் குளிர்காலமே இப்பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.

Related Posts

Leave a Comment