ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை தடுப்பதற்கான பிரித்தானியாவின் யோசனையை நிராகரித்தது பிரான்ஸ்!

by Column Editor

பிரான்ஸிலிருந்து தங்கள் நாட்டுக்கு அகதிகள் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்வதைத் தடுப்பதற்காக பிரித்தானியா முன்வைத்த யோசனைகளை பிரான்ஸ் நிராகரித்தது.

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27பேர் உயிரிழந்ததையடுத்து இதுபோன்ற விபத்து நிகழாமல் இருக்க, தாம் எடுக்க விரும்பும் ஐந்து படிகளை கோடிட்டுக் காட்டி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கடிதமொன்றை அனுப்பி வைத்தார்.

இதில், இதில், பிரான்ஸ் கடற்கரையிலிருந்து அதிகமான படகுகள் வெளியேறுவதைத் தடுக்க கூட்டு ரோந்து, சென்சார்கள் மற்றும் ரேடார் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பரஸ்பர கடல் ரோந்துகள் ஒருவருக்கொருவர் பிராந்திய நீரில் மற்றும் வான்வழி கண்காணிப்பு, பிரான்ஸ் உடனான இருதரப்பு வருவாய் ஒப்பந்தத்தில் உடனடி வேலை, உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆனால், பிரித்தானியா வரும் அனைத்து அகதிகளையும் பிரான்ஸ் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்; அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக பிரான்ஸ் கடற்கரைப் பகுதிகளில் பிரித்தானியா படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று பொரிஸ் ஜோன்ஸன் வலியுறுத்தியிருந்தார்.

எனினும், அந்தத் திட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பிரான்ஸ் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்தார்.

எனவே, இந்தப் பிரச்சினை குறித்து ஐரோப்பிய ஓன்றியம் நடத்தும் கூட்டத்துக்கு பிரித்தானிய உட்துறை அமைச்சர் பிரீத்தி படேலுக்கு அழைப்பு விடுக்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 25,700 பேர் இத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகமாகும்.

Related Posts

Leave a Comment