நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு பிரித்தானிய நாடாளுமன்றம் அங்கீகாரம்!

by Lifestyle Editor

பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவது குறித்தான, ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

இதன்மூலம், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள், இன்னும் 10 முதல் 12 வாரங்களுக்குள் விமானம் மூலம் ருவாண்டா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்கள்.

இதனை செயற்படுத்துவதற்காக பிரித்தானிய அரசாங்கம், வாடகை விமானங்களை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இவ்வாறு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை அனுப்பி வைக்க தடுப்புக்காவல் இடத்தை அதிகரித்துள்ளதுடன், வழக்கறிஞர்களையும் பணிக்கமர்த்தியுள்ளது.

குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டமூலம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் இருந்தது.

இந்நிலையில்தான் இன்று செவ்வாய்க்கிழமை, இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

பல்வேறு நாடுகளிலிருந்து சிறிய படகுகள் பிரித்தானியாவுக்குள் நுழையும் நபர்கள், அங்கு அகதிகளாக வசிக்க உரிமை கோரலாம்.

இதனால் பல்வேறு நாடுகளிலிருந்தும் பிரித்தானியாவுக்கள் வருபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

2021ஆம் ஆண்டுக்கு முன்னதாக 4 ஆண்டுகளில் மட்டும் 299 பேர் மாத்திரம் பிரித்தானியாவுக்கு சென்றுள்ள நிலையில், 2022ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 45,774 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உரிய சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் ரிஷி சுனக் இந்த விடயத்தில் உறுதியாக இருந்தார்.

இதனிடையே, பணம் பெற்றுக் கொண்டு மக்களை சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் கும்பலைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளையும் பிரித்தானிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

மேலும் இங்கிலாந்துக்கு வரும் அல்பேனிய நாட்டினரை அவர்களுடைய நாட்டிற்கே திருப்பி அனுப்புவதற்கும் லண்டன் அந்த நாட்டுடன் ஒப்பந்தம் போட்டது.

Related Posts

Leave a Comment