லண்டனில் யூத எதிர்ப்புக்கு எதிரான பேரணியில் கலந்துக்கொண்ட இருவர் கைது!

by Editor News

மத்திய லண்டன் வழியாக நகர்ந்த யூத எதிர்ப்புக்கு எதிரான பேரணியில் கலந்துக்கொண்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக் நிறுவனர் டொமி ரொபின்சன், அமைப்பாளர்களால் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டபோதும், அதனை மீறி செயற்பட்ட அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

இதுதவிர, மக்கள் கூட்டம் வைட்ஹாலில் இருந்து வெளியேறும் போது யூத விரோத கருத்துக்களை தெரிவித்ததற்காக ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்திய லண்டன் வழியாக யூத எதிர்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உட்பட இஸ்ரேல்-காசா போர் தொடங்கியதிலிருந்து நடந்த முதல் அணிவகுப்பில் 100,000 பேர் பங்கேற்றதாக அமைப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

ரோயல் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ் வெளியே கூடி, வைட்ஹால் வழியாக நாடாளுமன்ற சதுக்கத்திற்குச் சென்ற பெரும் கூட்டம், அங்கு பேரணியில் கலந்துக்கொண்டது.

‘பிரிட்டிஷ் யூதர்களுடன் தோளோடு தோள் சேருங்கள்’ மற்றும் ‘எப்போதும் இல்லை’ போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை கலந்து கொண்டவர்கள் ஏந்திச் சென்றதைக் காண முடிந்தது.

குறிப்பாக தலைநகரின் யூத சமூகத்திற்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த பேரணி வந்துள்ளது.

Related Posts

Leave a Comment