தக்காளி செடி முறையாக வளர்க்க டிப்ஸ்!

by Lifestyle Editor

வீட்டில் வளர்க்கும் செடிகளில் பெரும்பாலும் இந்த தக்காளி செடியின் இருக்கும். ஏனென்றால் வீட்டில் அழுகி போன தக்காளியை போட்டாலே அந்த விதையிலே முளைத்து விடக் கூடிய செடி தான் இது. முளைப்பது மட்டும் தான் இப்படி சாதாரணமாக முளைக்கும் ஆனால் இது முறையாக பராமரித்தால் தான் அதில் தக்காளியை பார்க்கலாம்.

தக்காளி செடிகள் முதலில் முளைத்து வரும் போது அது நாற்று (கொஞ்சமாக வேர்) விட்டுப் பிறகு அதை வேறொரு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும். அதே இடத்தில் இருந்தால் தக்காளி செடி நன்றாக வளராது. அதன் பிறகு தக்காளிச் செடியை நடும் போது இடைவெளி அதிகம் இருக்கும்படி வைக்க வேண்டும். இந்த செடிகள் அதிகம் படர்ந்து வரக்கூடியவை அருகருகே இருந்தால் செடியின் வளர்ச்சி தடைப்படும்.

தக்காளிச் செடி நன்றாக வெயில் படும் இடத்தில் வைத்து தான் வளர்க்க வேண்டும். அதே போல் இதற்கு தண்ணீரும் தாராளமாக இருக்க வேண்டும். தக்காளி செடி படர்ந்து வரக்கூடிய ஒரு தாவரம் தான். ஆனால் அதை அப்படி படர விட கூடாது. தக்காளி செடி கீழே படர்ந்து வரும் போது தண்டானது மண்ணில் புதைந்து தண்டு அழுகல் நோய் அதிகம் வர வாய்ப்பு உண்டு. இந்த செடிகளை நேராக நிமிர்த்தி வைத்து கட்டி தான் வளர்க்க வேண்டும். அதற்கு செடிக்கு பக்கத்தில் ஊன்று கோல் போல ஒரு குச்சியை நட்டு வைத்து அதில் கட்டி வளர்க்க வேண்டும். குச்சிக்கு பதிலாக பிளாஸ்டிக் பை போன்றவை இருந்தால் இன்னும் நல்லது ஏனென்றால் குச்சி வைத்தால் அதில் பூச்சிகள் வந்து செடியை தாக்கும். இந்தச் செடிகளுக்கு சாம்பல் உரம் கட்டாயமாக கொடுக்க வேண்டும். சாம்பலை தண்ணீரில் கலந்து செடிகளின் வேர்களுக்கு ஊற்றி வரும் போது செடிகளுக்கு பொட்டாசியம் சத்து அதிகம் கிடைத்து செடி நன்றாக வளரும்.

இந்த உரம் கொடுத்து ஒரு வாரம் இடைவேளையில் சுண்ணாம்பு கரைச்சலை கொடுக்கலாம். சுண்ணாம்பு கொஞ்சமாக எடுத்து தண்ணீரில் கலந்து அதை செடிகளுக்கு தெளித்து வரலாம் இதனால் செடிகளில் இருக்கும் பூச்சிகள் அழிவதோடு காய் அழுகல் நோய் வராமல் தடுக்கும். இந்த இரண்டு முறைகளும் செடியில் பூக்கள் வைப்பதற்கு முன்னரே இந்த உரங்களை நாம் கொடுத்து விட வேண்டும் பூக்கள் வைத்த பிறகு இவைகளை தெளிக்க கூடாது.

தக்காளி செடியின் தண்டுகளில் உள்ள பூச்சிகளையும் இலைகளின் உள்ள பூச்சிகளையும் போக்க விரலி மஞ்சள் , பூண்டு இரண்டையும் நசுக்கி தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி செடிகளின் தண்டுகளில் தெளித்து வந்தால், செடிகளில் உள்ள பூச்சிகள் மடிந்து விடும். இந்த செடிகளில் மாவு பூச்சியும் அதிகம் வரும் இதற்கு உரம் எதுவும் தெளிக்க தேவையில்லை அதற்கு பதிலாக பூச்சி உள்ள இடத்தில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்தாலே அந்த பூச்சிகள் போய் விடும். செடிகளில் உள்ள பூக்கள் உதிராமல் இருக்க தேமோர் கரைசல் கொடுக்கலாம். அல்லது புளித்த மோர் அல்லது மோருடன் கொஞ்சம் பெருங்காயம் சேர்த்தும் தெளித்து விடலாம். இதனால் செடிகளின் அமிலத் தன்மை குறைந்து பூக்கள் உதிராமல் இருக்கும்.

Related Posts

Leave a Comment