இந்தியர்கள் விசா இன்றி வருவதற்கு அனுமதியளித்த இலங்கை ..!

by Lifestyle Editor

இந்தியா மட்டுமல்லாமல் சீனா, ரஷியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நாட்டிற்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. வணிக நோக்கத்திற்காக பயணம் செய்பவர்கள் மற்றும் சுற்றுலாவிற்காக செல்லக் கூடியவர்களுக்கு இது பெருமளவில் பலன் அளிக்கும்.

அதே சமயம், உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க, நமக்கு அருகாமையில் உள்ள சிறு தீவு நாடான இலங்கையை நோக்கி ஏன் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளின் மக்களும் படையெடுத்துச் செல்கிறார்கள் என்று தெரியுமா? இதை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு முன்பாக இலவச விசா திட்டத்தை இலங்கை அரசு ஏன் அறிவித்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா உள்பட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இன்றி தங்கள் நாட்டிற்கு பயணம் செய்யும் திட்டத்தை, சோதனை முறையில் 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் செயல்படுத்த இருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. அதாவது முழுமையாகப் பார்க்கப் போனால், அடுத்த 5 மாதங்கள் வரையில் தான் இந்த சலுகை வழங்கப்பட இருக்கிறது.

இந்த விசா சலுகை வழங்கப்படுவதற்கு முன்பு வரையிலும், இலங்கைக்கு பயணம் செய்யும் இந்தியர்கள் அங்கு சென்றதும் எலெக்ட்ரானிக் பயண அங்கீகார ஆவணம் ஒன்றை வழங்க வேண்டியிருந்தது. சுமார் 30 நாட்கள் அந்த ஆவணம் செல்லுபடி ஆகும். அதனைப் பெறுவதற்கு இந்திய மதிப்பில் ரூ.2080 செலுத்த வேண்டியிருந்தது.

தற்போது விசா எதுவுமின்றி இந்தியர்கள் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தக் கட்டணம் எதுவுமின்றி, இந்தியர்கள் இலங்கையை சுற்றிப் பார்க்க முடியும்.

வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகள் :

இந்தியா, இலங்கை இடையே ராமயண காலத்தில் இருந்தே வரலாற்று ரீதியான தொடர்புகள் இருந்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இலங்கை தீவில் தான் சீதையை ராவணன் கடத்தி வைத்திருந்ததாகவும், அந்தத் தீவின் மீது ராமர் படையெடுத்து சென்று சீதையை மீட்டு வந்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.

இந்த புராணத்தை மையப்படுத்திய சுற்றுலா இடங்கள் இலங்கையில் ஏராளம் உள்ளன. அதேபோல, சிகிரியா பகுதியில் இருப்பது ராவணனின் மாளிகை என்று அறியப்படுகிறது. நம்பிக்கையின் அடிப்படையில் ராமயணத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு இந்தியாவில் இருந்து எண்ணற்ற மக்கள் சுற்றுலா செல்கின்றனர்.

இந்து மதம் மற்றும் பௌத்த மத தொடர்புகள் :

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மத ரீதியாகவும் தொடர்புகள் உண்டு. பௌத்த மதத்தை பின்பற்ற தொடங்கிய இந்திய பேரரசர் அசோகரின் மகளும், இளவரசியுமான சங்கமித்ரா, பீகார் மாநிலம், புத்தகயாவில் போதி மரத்தைப் பெற்று வந்து, அதனை இலங்கையில் நட்டு வளர்த்ததாக வரலாறு உண்டு.

இந்தியாவில் உள்ள பௌத்த மதத்தினர் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் பௌத்த மதத்தை பின்பற்றக் கூடியவர்கள் பௌத்த மத தலங்களில் வழிபாடு நடத்துவதற்காக இலங்கை செல்கின்றனர். அதேபோல இந்து மத வழிபாட்டு தலங்களும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளன. திருகோணமலையில் உள்ள கோனேஸ்வரம் கோவில், நல்லூர் கந்தசாமி கோவில் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் அங்கு உள்ளன.

இயற்கை சுற்றுலா :

இது மட்டுமல்லாமல் ஊட்டி, கொடைக்கானலுக்கு இணையான மலைப் பிரதேசங்கள் இலங்கையில் ஏராளமாக உள்ளன. பிற இயற்கை சார்ந்தச் சார்ந்த சுற்றுலா இடங்களுக்கும் குறைவில்லை. ஆக, முற்றிலும் ஆன்மீக ரீதியாகவும், இயற்கை ரீதியாகவும் சுற்றுலா இடங்கள் நிரம்பிய இலங்கைக்கு இந்தியர்கள் படையெடுத்துச் செல்லும் நிலையில், இந்த இலவச விசா திட்டம் அவர்களுக்கு பெருமளவில் பலன் அளிப்பதாக அமையும்.

Related Posts

Leave a Comment