ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு ..

by Lifestyle Editor

உக்ரைன் மீது போர் அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், 2022 பிப்ரவரி 24ஆம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனுக்கு கலக்கத்தை தந்தன. இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மேலும் சில நட்பு நாடுகளின் உதவியுடன் உக்ரைன் உத்வேகத்துடன் பதில் தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்கு தக்க பதிலடியை தந்து வருகிறது. போர் தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும், தீர்வு ஏதும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், இந்த போர் தொடர்பான மனுவை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவா ஆகியோரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இந்த போர் காரணமாக சட்டவிரோதமாக பல மக்கள், குழந்தைகளை நாடு கடத்தி இடமாற்றம் செய்யும் சூழல் உருவானது. உக்ரைன் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு ரஷ்ய அதிபர் புதின் தான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொறுப்பு எனக் கூறி இந்த உத்தரவை சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமைட்ரோ குலேபா வரவேற்றுள்ளார். அதேவேளை, சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அர்த்தமற்றது. எங்கள் நாட்டிற்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஷகரோவா கூறியுள்ளார். ரஷ்யா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடு இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Related Posts

Leave a Comment