அனில் கும்ளேவின் சாதனையை சமன் செய்த அஸ்வின் – முழு விவரம் இதோ!

by Lifestyle Editor

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், அனில் கும்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லபுஷேன் 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார் வீழ்த்தினார். இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி 24 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்த போது முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். அதன்பின்னர் ரவீந்திர ஜடேஜா-அக்சர் பட்டேல் இருவரும் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தனர். இதனால் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், 3-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜடேஜா, அக்சர் பட்டேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா 70 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அக்சர் பட்டேல், 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 223 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த நிலையில், ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி 32.1 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட் , ஜடேஜா 2 விக்கெட் , அக்சர் படேல் , முகமது ஷமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் அஷ்வின், அனில் கும்பிளேவின் சாதனையை சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் நேற்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது 25-வது முறையாகும். இதன் மூலம் இந்திய மண்ணில் டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கும்பிளேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்து அவருடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார். சொந்த மண்ணில் இந்த வகையில் இவர்களை விட அதிகமாக இலங்கையின் முரளிதரன் 45 முறையும், ரங்கனா ஹெராத் 26 முறையும் 5 விக்கெட் வீழ்த்தி முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

Related Posts

Leave a Comment