அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி – மாகாண சபைகளின் உயர் அதிகாரிகள் பணத்தை விரயம் செய்வதாக குற்றச்சாட்டு ..

by Lifestyle Editor

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்பது மாகாண சபைகளின் உயர் அதிகாரிகள் எரிபொருள் கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற கொடுப்பனவுகளை பெற்று பணத்தை விரயம் செய்வதாக கணக்காய்வாளர் திணைக்களம் நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது.

கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் ஆறு கணக்காய்வு விசாரணைகளின் மூலம் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஒன்பது மாகாண சபைகளிலும் ஆளுநர்களின் விருப்பத்திற்கேற்ப கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2018ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வருட ஆரம்பம் வரையில் மாகாண சபை அதிகாரிகளுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவுகள், குழு கொடுப்பனவுகள், எரிபொருள் கொடுப்பனவுகள் என பதினாறு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சில அதிகாரிகள் எரிபொருள் கொடுப்பனவை பெற்றுக்கொண்டு மாகாண சபை வாகனங்களில் கடமைக்கு சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

சுற்றறிக்கை மூலம் அரச அதிகாரிகளுக்கு 180 லீற்றர் கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில் மாகாண சபை அதிகாரிகள் 350 லீற்றர் வரை எரிபொருள் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாகாண சபைகள் கலைக்கப்பட்ட அதேவேளை மாகாண சபைத் தலைவர்கள் மற்றும் அவர்களது ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மாகாண சபைத் தவிசாளர்கள் தங்களது வீடுகள் அந்தந்த மாகாண சபை எல்லைக்குள் அமைந்திருந்தாலும் வீட்டு வாடகைக் கொடுப்பனவாக ஐம்பதாயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவாகப் பெற்றுள்ளனர்.

மேல்மாகாண சபையில் மட்டும் உத்தியோகபூர்வ இல்லங்கள் இல்லாத பதினான்கு அதிகாரிகள் வீட்டு வாடகை கொடுப்பனவை பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தென் மாகாண சபையின் அதிகாரிகளும் அவ்வாறே செயற்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த கொடுப்பனவைப் பெற்ற சில அதிகாரிகளின் தனிப்பட்ட வீடுகள் மாகாண சபைகளுக்கு மூன்று நான்கு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் தணிக்கை விசாரணை அறிக்கைகள், ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு ஆளுனர்களுக்கு அதிகாரம் உள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கையின் அடிப்படையில் அமையாத பட்சத்தில் ஆளுநர்களின் விருப்பத்திற்கு அமைய இவ்வாறு கொடுப்பனவுகளை மேற்கொள்வது சட்டவிரோதமானது என கணக்காய்வாளர் நாயகம் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Posts

Leave a Comment