மார்கழி மாதம்: திருப்பாவை-27, திருப்பள்ளியெழுச்சி பாடல் -07

by Lifestyle Editor

ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும்.

திருப்பாவை பாடல் – 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்

பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

நெய் பெய்து முழங்கை வழிவார

கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இதனை அருளிச் செய்தார். திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள் கொண்ட பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… திருப்பள்ளியெழுச்சி என்பது, ‘சுப்ரபாதம்’ என வடமொழியில் வழங்கும். வைகறையில்-அதிகாலைப் பொழுதில்- இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் : 07

அது பழச்சுவையென அமுதென

அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்

இது அவன் திருவுரு இவன் அவன் எனவே

எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்

மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்

திருப்பெருந்துறை மன்னா!

எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்:

தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே! உன் பெயர் சொன்னால் அது பழம் போல் இனிக்கிறது. பால் போல் சுவையாக இருக்கிறது. உன்னைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது சிரமமானது. உன்னை எளிதாகப் பிடித்து விடலாம் எனச் சொல்கிறார்களே தவிர, தேவர்களால் கூட அதைச் செய்ய முடியாது. உன்னுடைய வடிவம் என்ன? இவன் தான் அவனோ? என்று அனுமானிக்கத் திணறும் தேவர்களுக்கே காட்சி தராத நீ, இதோ, என் நிஜ வடிவம் இதுவே எனச் சொல்லி, இதோ! எங்கள் முன்னால் இருக்கிறாய். எங்களை நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைச் செய் என்றே உன்னிடம் கேட்போம். எம்பெருமானே! நீ எழுந்தருள்வாயாக.

Related Posts

Leave a Comment