அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல விருப்பமா? – விமானம், ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து குறித்த முழு விபரம்..

by Lifestyle Editor

அயோத்தியில் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அயோத்தி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள விடுதிகள் ஏற்கனவே நிரம்பி வழிய தொடங்கியுள்ளன. இன்னமும் கூட நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து அயோத்தி நோக்கி சென்று ராமர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு எண்ணற்ற மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். நீங்களும் கூட அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று விரும்பினால், நாட்டின் பல பகுதிகளில் இருந்து அயோத்தி நோக்கி செல்லக்கூடிய விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்துகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் தலைநகர் டெல்லிக்கு நிச்சயமாக மணிக்கு ஒரு விமானமாவது புறப்பட்டு விடும்.

ஆக டெல்லி சென்றடைந்து விட்டால் அங்கிருந்து அயோத்திக்கு இயக்கப்படும் நேரடி சிறப்பு விமான மூலமாக நீங்கள் ராமர் கோவிலுக்கு செல்லலாம். முன்னதாக அயோத்தியில் புத்தம் புதியதாக கட்டப்பட்ட மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் மாத இறுதியில் திறந்து வைத்தார். அந்த விமான நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய ரக விமானங்கள் இந்த விழாவை ஒட்டி இயக்கப்படுகின்றன. முதல் கட்டமாக ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகள் வரை கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம் ஆனது அயோத்திக்கு தொடர்பை ஏற்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.

பேருந்து சேவை:

எண்ணற்ற புனித தளங்களை கொண்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய பகுதிகளில் இருந்து அயோத்தி நகருக்கு நேரடி பேருந்து சேவை இயக்கப்படுகிறது. ரிஷிகேஷ் நகரில் இருந்து தினசரி இரவு 7 மணிக்கும், ஹரிதுவார் நகரில் இருந்து தினசரி இரவு 8.30 மணிக்கும் அயோத்திக்கான பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.இதில் பயணிகளுக்கான கட்டணம் ரூ.970 ஆகும்.

இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா சேவைகள்:

நாட்டில் அதிகப்படியான விமானங்களை இயக்கிக் கொண்டிருக்கும் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் சார்பில் பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு தொடர்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து வாரத்திற்கு மூன்று விமானங்கள் அயோத்திக்கு இயக்கப்படுகின்றன. டெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்தும் நேரடி விமான சேவைகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் விமான சேவை:

முதல் கட்டமாக ஜனவரி 21 ஆம் தேதியில் இருந்து அயோத்திக்கு டெல்லியில் இருந்து நேரடி விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தொடங்குகிறது. அடுத்த கட்டமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு வெவ்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு விமானங்களை இயக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரயில் போக்குவரத்து சேவை:

அயோத்தி மாநகரில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து வாரணாசி நகருக்கு செல்லக்கூடிய ரயிலில் சென்று, பின்னர் அங்கிருந்து அயோத்தி நகருக்கு நேரடி ரயிலில் பயணிக்கலாம்.

Related Posts

Leave a Comment