காய்கறிகளின் வரத்து அதிகரிப்பு; விலை குறைந்தது…

by Column Editor

கோயம்பேடு சந்தைக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரா ,கர்நாடகா, மகாராஷ்டிரா ,மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் கனமழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, அதன் விலை கணிசமாக உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளியின் விலை மட்டும் 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதனால் சாமானியர்கள் மிகுந்த கவலை அடைந்த நிலையில், வியாபாரிகள் தரப்பில் நல்ல லாபம் கிடைத்தது எனலாம்.

தற்போது மழை இல்லாத காரணத்தினால் விளைச்சல் அதிகரித்து, காய்களின் வரத்தும் அதிகரித்துள்ளது. மழைக்கு முன்பு 5000 டன் காய்கறிகள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 7,000 டன் வரை காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தக்காளி கிலோ 10 ரூபாய்க்கும் , கத்தரிக்காய் ரகங்கள் 15 ரூபாய்க்கும் கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் வெங்காயத்தின் விலை மட்டும்தான் சற்று அதிகரித்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது சில்லறை வணிகத்தில் ரூபாய் 40ஐ தொட்டுள்ளது.. குறிப்பாக வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை திருப்பூர் பகுதிகளில் 10ரூபாய்க்கு விற்பனை ஆனாலும் வாங்க ஆள் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் சந்தையில் 50 ஆயிரம் பெட்டிகள் தக்காளி வருவதால் 1,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு பெட்டியின் விலை தற்போது 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்தாலும், கடுமையான சரிவை சந்தித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் விவசாயிகளுக்கு ஒருபுறம் கவலை தொற்றிக் கொண்டுள்ளது.

Related Posts

Leave a Comment