“பப்ளிக் எக்ஸாம் மாதிரி இருக்கனும்”.. நாளை ஆரம்பமாகும் திருப்புதல் தேர்வு!

by Column Editor

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால் அதற்குள்ளாக ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3ஆவது அலை ஏற்பட்டது. தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

பரவல் குறைந்தவுடன் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய திருப்புதல் தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அதன்படி 10ஆம் வகுப்புக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ஆம் தேதி எனவும் இரண்டாவது திருப்புதல் தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 வரை நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது. 12ஆம் வகுப்புக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்.9-பிப்.16 வரையிலும் 2ஆம் திருப்புதல் தேர்வு மார்ச் 28-ஏப்ரல் 5 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

முதன்முறையாக திருப்புதல் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட உள்ளன. தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் 5 மணி வரை என இரு பிரிவுகளாக நடத்தப்படும். பொது தேர்வுகளுக்கான கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் மாற்று பள்ளிகளில் மதிப்பீடு செய்யப்படும். பொதுத்தேர்வுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment