சோதனையில் சிக்காத “கள்ள ஒமைக்ரான்”.. முந்தைய வகைகளைக் காட்டிலும் அதிவேகமாக பரவுவதால் அச்சம்!

by Lifestyle Editor

டெல்டா, ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் வெவ்வேறு மாறுபட்ட வடிவங்களில் பரவி வரும் நிலையில், ஒமைக்ரானின் மாறுபட்ட வைரஸ் வகை ஒன்று தற்போது அதிகமாகப் பரவி வருகிறது.

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என பல வகைகளில் பரவி வருகிறது. இவற்றில் சமீபத்திய வரவான ஒமைக்ரான் வைரஸ் முந்தைய வகைகளைக் காட்டிலும் அதிவேகத்தில் பரவுகிறது.

இந்நிலையில் ஒமைக்ரானின் மாறுபட்ட வகையான கள்ள ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் சத்தமின்றி புகுந்துள்ளது. கள்ள ஒமைக்ரான் என இந்த கொரோனா திரிபை ஏன் அழைக்கிறோம் என்பதை அறிய ஒமைக்ரானின் வகைகள் குறித்து அறிந்து கொள்வது அவசியம். B.1.1.529 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட ஒமைக்ரான் வைரஸ் BA.1, BA.2 மற்றும் BA.3 என்ற மூன்று முக்கிய உட்பிரிவுகளைக் கொண்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுவரை உலக அளவில் அதிகம் பரவிய ஒமைக்ரான் வைரஸ் BA.1 வகையாக இருக்கிறது. ஆனால் இப்போது டென்மார்க் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் BA.2 வகை அதிகமாக பரவி வருகிறது. டிசம்பர் பிற்பகுதியிலிருந்து ஜனவரி நடுப்பகுதி வரையிலான இரண்டு வாரங்களில், BA.2 வகை தொற்று 20% இல் இருந்து 45% ஆக உயர்ந்துள்ளதாக டென்மார்க் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளில் இந்த மாறுபட்ட வைரஸ் வகை வேகமாக பரவி வருவதாக டென்மார்க் அரசாங்கம் கூறியுள்ளது.

இந்த BA.2 வகை வைரஸ் தான் கள்ள ஒமைக்ரான் என அழைக்கப்படுகிறது. பொதுவாக கொரோனா பாதிப்பைக் கண்டறிய ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தும்போது அதில் கொரோனா பாதிப்பு உறுதியாகி, எஸ் ஜீன் விடுபட்டிருந்தால் அது ஒமைக்ரான் பாதிப்பு என கண்டறியப்படுகிறது. ஆனால் இந்த கள்ள ஒமைக்ரான் வகையில் அவ்வாறு எஸ் ஜீன் விடுபடுவதில்லை. அதனால் இது ஒமைக்ரான் வகை பாதிப்பா என கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்படி தான் இருப்பதை சோதனையில் வெளிக் காட்டிக் கொள்ளாததாலேயே இந்த BA.2 வகை வைரஸை கள்ள ஒமைக்ரான் என அழைக்கின்றனர்.

இதிலும் சில விஞ்ஞானிகள் மாறுபட்ட கருத்தை முன்வைக்கின்றனர். கள்ள ஒமைக்ரானை ஆர்டிபிசிஆர் சோதனை மூலம் கண்டறிய முடியும் என்றும், பயன்படுத்தப்படும் சோதனையைப் பொறுத்து அதன் முடிவுகள் மாறும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த கள்ள ஒமைக்ரான் அதிகமாகப் பரவினாலும், அசல் ஒமைக்ரானால் ஏற்படும் பாதிப்பை விட இதனால் அதிக பாதிப்பு ஏற்படவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். மேலும் கொரோனா தடுப்பூசிகள் இந்த கள்ள ஒமைக்ரானுக்கு எதிராகச் செயல்படலாம் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்,

ஆனால் மற்றொரு தரப்பினரோ, இது முற்றிலும் மாறுபட்ட கொரோனா வைரஸ் என்றும் உலக சுகாதார அமைப்பு இதனை கவலைக்குரிய வைரஸ் வகையாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Related Posts

Leave a Comment