சிறுகிழங்கு அவியல்

by Column Editor

டிசம்பர் மாத இறுதியில் இருந்து பொங்கல் பண்டிகை வரை மட்டுமே கிடைக்கும் சிறுக்கிழங்கு, உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. கிழங்கு வகையில் ஒன்றாக உள்ள சிறுகிழங்கு, வெப்பமண்டல பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது ஆகும். தமிழகத்தின் தென்மாவட்டங்கள், ஆப்பிரிக்கா, மலேஷியா போன்ற நாடுகளில் மட்டுமே சிறுகிழங்கு விளையும்.

சிறுகிழங்கு அவியல் செய்ய தேவையான பொருட்கள்:

சிறுகிழங்கு – 1 கிலோ,
தக்காளி – 4,
வெங்காயம் – 2 (தாளிப்பதற்கு),
பச்சை மிளகாய் – 3,
தேங்காய் – அரை முறி,
வெள்ளைப்பூண்டு – 3,
கடலை பருப்பு (பூம்பருப்பு) – 250 கிராம்,
சீரகம் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட சிறுகிழங்கை சூடான நீரில் போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும். ஏனெனில் சிறுகிழங்கின் மீது மண் படிந்திருக்கும் என்பதால், அதனை எளிய முறையில் அகற்ற உருளைக்கிழங்கை அவிப்பது போல சிறுகிழங்கை வேகவைக்க வேண்டும்.

சிறுக்கிழங்கு தயாராகும் நேரத்தில், எடுத்துக்கொண்ட தக்காளி, தேங்காய், பச்சை மிளகாய், வெள்ளைப்பூண்டு, சீரகத்தை அரைத்து விழுது போல எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கடலை பருப்பை தனியே ஒரு பாத்திரத்தில் வேகவைக்க வேண்டும்.

சிறுகிழங்கு முக்கால் வேக்காடு வந்ததும், அதனை இறக்கி அதில் உள்ள நீரை வெளியேற்றி, மற்றொரு பாத்திரத்தில் போட்டு நல்ல தண்ணீரில் சிறிது குளிர வைத்து, அதில் உள்ள கருப்பு தோல் மற்றும் அது பற்றி இருக்கும் வேரினை சுத்தமாக அகற்ற வேண்டும். கருப்பு நிற தோல் மற்றும் வேரினை அகற்றாத பட்சத்தில், சாப்பிடும் போது அதில் உள்ள மணல் வாயில் தட்டுப்படும்.

சிறுகிழங்கை தோலுரித்து எடுத்துக்கொண்ட பின்னர், அதனை சிறுசிறு பகுதியாக வெட்ட வேண்டும். ஏனெனில் அவற்றில் நாம் அரைத்து வைத்துள்ள கலவையின் உப்பு, காரம் போன்றவை பிடிக்க நீண்ட நேரம் ஆகும். சிறிதாக வெட்டிக்கொண்டால் நலம்.

வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து மற்றும் வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து, அதனுள் முதலில் வெட்டிவைத்துள்ள சிறுகிழங்கை சேர்த்து வதக்க வேண்டும். சிறுகிழங்கு வதங்கி வரும் போதே அதன் மனம் அசரவைக்கும். பின்னர், அதனுள் வேக வைத்து எடுத்துக்கொண்ட கடலைப்பருப்பை சேர்க்க வேண்டும்.

பின்னர், அரைத்து வைத்த கலவையை சேர்ந்து நன்கு கொதிக்க விட்டு, சிறுகிழங்கில் உப்பு மற்றும் காரம் போன்றவை குறைந்தளவாவது சேர்ந்துவிட்டதா? என்பதை உறுதி செய்து இறக்கி பரிமாறலாம். இதனை சாதத்துடன் நேரடியாக ஊற்றியும் சாப்பிடலாம்.

Related Posts

Leave a Comment