தென் ஆப்பிரிக்காவில் இந்தியா தொடரை வெல்ல பொன்னான வாய்ப்பு

by Lifestyle Editor

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் நேற்றில் இருந்து பயிற்சியை தொடங்கினார்கள்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்ற பொன்னான வாய்ப்பு இருக்கிறது என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் விக்கெட் கீப்பருமான சபாகரீம் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி முதல் முறையாக தொடரை கைப்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2-0 அல்லது 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வெல்லலாம். ஒருநாள் தொடரை பொறுத்தவரை எந்த அணி பலம் பெற்றதோ அந்த அணி தொடரை கைப்பற்றும்.

டெஸ்ட் அணியை பொறுத்தவரை இந்திய அணி பலம் பெற்று இருக்கிறது. அணியில் உள்ள 11 வீரர்களை தவிர மற்றவர்களும் நல்ல நிலையில் உள்ளனர். இதை ஆஸ்திரேலியாவில் பார்த்தோம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் நாம் வெற்றிபெற்றோம். வழக்கமாக விளையாடும் வீரர்களில் 5 அல்லது 6 பேர் இல்லாமல் இந்த வெற்றி கிடைத்தது. மாற்று ஆட்டக்காரர்களால் இந்திய அணியின் பெஞ்ச் பலம் பெற்று உள்ளது.

இதே நிலைதான் தற்போதும் இருக்கிறது. எனவே அனுபவம் மற்றும் இளமையை கொண்ட இந்திய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் தொடரை கைப்பற்ற பொன்னான வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி புதிய வரலாறு படைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே கருத்தை தான் அணியில் உள்ள புஜாராவும் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, வேகப்பந்து வீரர்களால் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் என்றார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா மண்ணில் இதுவரை 7 முறை டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இதில் 6 தடவை தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது. ஒருமுறை தொடர் சமநிலையில் முடிந்தது. 1992-93-ம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணி அங்கு சென்றது.

தென் ஆப்பிரிக்க தொடருக்கு வெவ்வேறு கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி கேப்டனாக நீட்டிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா புதிய கேப்டனாக தேர்வாகி உள்ளார்.

காயம் காரணமாக ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித்சர்மா இடத்துக்கு இந்திய ஏ அணி கேப்டன் பிரையாங் பாஞ்சல் தேர்வாகி உள்ளார்.

Related Posts

Leave a Comment