தங்கத்தை தவறவிட்டார் பிவி சிந்து!

by Editor News

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நடத்தக்கூடிய கடைசி தொடரான உலக பைனல்ஸ் இந்தோனேசியாவில் நடைபெற்று வந்தது. டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. இன்று இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. இந்தியா சார்பில் பிவி சிந்து, ஶ்ரீகாந்த், லக்‌ஷ்யா சென், சத்விக் சாய்ராஜ் – சிராக் செட்டி ஜோடி மற்றும் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி ஆகியோர் கலந்துகொண்டனர். குரூப் போட்டிகளில் பிவி சிந்து, லக்‌ஷ்யா சென் ஆகியோர் தவிர மற்றவர்கள் வெளியேறிவிட்டனர்.

நேற்று பிவி சிந்து அரையிறுதிப் போட்டியில் விளையாடினார். இந்தாண்டு 7ஆவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த அவர், முதன்முறையாக பைனலுக்குள்ளும் சென்றார். அரையிறுதிப் போட்டியில் அவரின் பரமவைரிகளில் ஒருவரான ஜப்பான் வீராங்கனை யமகுச்சியுடன் மோதினார். இந்தோனேசிய மாஸ்டர்ஸ் அரையிறுதிப் போட்டியில் யமகுச்சி, சிந்துவை தோற்கடித்திருந்தார். அதேபோல இருவரும் நேருக்கு நேர் மோதியதில் 12 முறை சிந்துவும் 8 முறை யமகுச்சியும் வென்றுள்ளனர்.

இதனால் நேற்றைய ஆட்டம் ஆரம்பம் முதலே விறுவிறுப்புடன் சென்றது. கடைசி செட் வரை சென்ற இந்த ஆட்டத்தில் 21-15, 15-21,21-19 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றிபெற்றார். அந்த வகையில் இன்று இறுதிப்போட்டியில் கொரிய வீராங்கனை ஆன் செயாங்குடன் மோதினார். 40 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் செயங்கிடம் 16-21, 12-21 என்ற கணக்கில் சிந்து வீழ்ந்தார். இறுதிப்போட்டிக்கான பரபரப்பு இல்லாமல் ஒன்சைட் ஆட்டமாகவே முடிந்துவிட்டது. இதனால் தங்கப்பதக்கத்தை தவறவிட்டு வெள்ளி வென்றார்.

Related Posts

Leave a Comment