சென்னையில் அதிகரிக்கும் டெங்கு

by Column Editor

சென்னையில் பெய்த கன மழை காரணமாக, கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னையிலும் டெங்கு காய்ச்சல் எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சென்னையில் ஒரே நாளில் 105 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதைத் தவிர்க்கும் கடமை அரசுக்கும் பொது மக்களுக்கும் உள்ளது.

மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. வீட்டைச் சுற்றிலும் தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. இதனால் கொசு மற்றும் அதன் மூலமாகப் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய் பரவல் அதிகரித்துள்ளது. டெங்கு கொசு சாலையில் தேங்கும் தண்ணீரில் வளர்வது இல்லை. அதற்கு நன்னீர் தேவை.

வீட்டைச் சுற்றி தொட்டிகள், மாடியில் தண்ணீர் வெளியே வழியின்றி தேங்கி நிற்கும் இடம், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் பாட்டில், இளநீர் கூடு, உடைந்த பயன்படுத்தாத பக்கெட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் நன்னீரில் கொசுக்கள் வேகமாக வளர்ச்சி அடைகின்றன.

வெயில் அதிகமாக இருந்தால் தண்ணீர் வற்றிவிடும். ஆனால், தொடர்ந்து தூறலும், மழையுமாக இருப்பதால் கொசுக்கள் வளர்ச்சிக்கு இந்த சூழல் சாதகமாக இருக்கிறது. இதைத் தவிர்க்க பொது மக்கள் மற்றும் அரசு இணைந்து செயல்பட வேண்டும்.ஒவ்வொருவரும் அவர் அவர் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில், கப், உரல் போன்ற தண்ணீர் தேங்கும் பொருட்களில் தண்ணீர் இருந்தால் அதைக் கீழே கொட்டி அகற்ற வேண்டும். வீட்டைச் சுற்றி பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சாலைகளில் தேங்கும் தண்ணீரை அரசு அகற்ற வேண்டும். ஆனால், வீட்டைச் சுற்றி, வீட்டின் மாடியில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றும் பொறுப்பு அந்த வீட்டில் உள்ளவர்களுக்குத்தான் உள்ளது. கொசுவால் நமக்கு பாதிப்பு வராது என்று அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். எல்லோருக்கும் கொசு நோயைப் பரப்பும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க தடுப்பூசி இல்லை. கொசு கடிக்காமல் தடுப்பது மட்டுமே வரும் முன் காக்க ஒரே வழி. இதனுடன், நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலை கஷாயம், கொய்யா இலை கஷாயம் போன்றவற்றை அருந்தி வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.

Related Posts

Leave a Comment