கர்ப்பமா இருக்கீங்களா..? இந்த ஸ்கின் கேர் பொருட்களை நீங்க யூஸ் பண்ணவே கூடாது..!

by Editor News

தாய்மார்கள் பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருட்கள் மற்றும் உணவு சார்ந்த பொருட்களில் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கும் 200க்கும் மேற்பட்ட நச்சு கெமிக்கல்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது குழந்தை பிறப்பதற்கு முன்பே குழந்தைக்கு இந்த கெமிக்கல்கள் காரணமாக நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இதன் மூலமாக தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு, தூய்மை மற்றும் சௌகரியத்திற்காக பெயர் போனது தாயின் கருவறை. குழந்தையை கருவில் சுமக்கும் பொழுது வெளிப்புற ஆபத்துகளில் இருந்து தனது குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக ஒரு தாய் உணர்கிறாள். தன்னுடைய குழந்தையை பாதுகாக்கவும் அதற்கு தேவையான போஷாக்கை வழங்கவும் பல்வேறு விதமான விஷயங்களில் தாய்மார்கள் ஈடுபடுகின்றனர். எனினும் குழந்தையின் நன்மையை கருத்தில் கொள்ளும் அதே வேளையில் குழந்தைக்கு தீங்கு விளைவிக்க கூடிய விஷயங்களில் இருந்தும் தாய்மார்கள் விலகி இருக்க வேண்டும்.

ரெட்டினாய்டுகள் :

முகப்பரு மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறிகளை எதிர்த்து போராடுவதற்கான ஒரு தீர்வாக ரெட்டினாய்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் கர்ப்பிணி பெண்களுக்கு இது ஆபத்தானதாக விளைகிறது. உதாரணமாக ட்ரீட்டினோயின் மற்றும் ரெட்டினால் போன்றவை குழந்தைகளில் பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தலாம்.

சாலிசிலிக் அமிலம் :

இது பொதுவாக முகப்பரு மற்றும் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை குறைந்த அளவுகளில் கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் பொழுது பாதுகாப்பானதாக அமைகிறது. அதேவேளையில் அளவுக்கு அதிகமாக அல்லது அடிக்கடி பயன்படுத்தும் பொழுது அதனால் குழந்தைகளில் இதய கோளாறுகள் அல்லது குறைந்த பனிக்குட நீர் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே முடிந்தவரை கர்ப்பிணி பெண்கள் சாலிசிலிக் அமிலத்தை தவிர்ப்பது நல்லது.

ஹைட்ரோகுவினோன் :

ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் கரும்புள்ளிகளுக்காக பயன்படுத்தப்படும் இந்த கெமிக்கல் குழந்தைகளில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று ஒரு சில ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கெமிக்கல் சன்ஸ்கிரீன்கள் :

நமது சரும பராமரிப்பு வழக்கத்தில் சன்ஸ்கிரீனின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் மார்க்கெட்டில் கிடைக்கும் கெமிக்கல் சன்ஸ்கிரீன்கள் மிகவும் ஆபத்தானது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இவற்றை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சன் ஸ்கிரீன்களில் பென்சோபினோன்கள், ஆக்சிபென்சோன் மற்றும் அவோபென்சோன் போன்ற கெமிக்கல்கள் உள்ளன. இவை ஹார்மோன் சீர்குலைவை ஏற்படுத்தலாம். இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

ஃபார்மால்டிஹைடு :

ஃபார்மால்டிஹைடு பெரும்பாலான சரும பராமரிப்பு ப்ராடக்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் கர்ப்பிணி பெண்கள் இதிலிருந்து முற்றிலுமாக விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த கெமிக்கல் புற்றுநோய் மற்றும் கருக்கலைப்பை ஏற்படுத்தலாம் என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃபார்மால்டிஹைடு மற்றும் அது சம்பந்தமான பிரிசர்வேட்டிவ்கள் அடங்கிய பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

பாராபென்கள் :

பெரும்பாலான சரும பராமரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படும் பாராபென்கள் தோலில் மிக எளிதாக உறிஞ்சப்பட்டு, கர்ப்பிணி பெண்களில் ஹார்மோன் சீர்குலைவை ஏற்படுத்துகிறது. நீண்ட கால பயன்பாடு குழந்தைகளில் உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தலாம்.

எனவே கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் கருதி முடிந்தவரை கடைகளில் விற்பனை செய்யப்படும் கெமிக்கல் சார்ந்த பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். மேலும் ஒரு சில பொருட்களை பயன்படுத்தும் பொழுது அவற்றை சரியாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை பின்பற்றாவிட்டாலும் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதையும் மனதில் கொள்ளவும்.

Related Posts

Leave a Comment