Maidaan : திரைப்பட விமர்சனம்

by Lifestyle Editor

அஜய் தேவ்கன் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பயோபிக் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக வெளியாகியுள்ள திரைப்படம் ”Maidaan”. பதாய் ஹோ (Badhaai Ho) திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த அமித் ஷர்மா இப்படத்தினை இயக்கியுள்ளார்.

இந்திய அணியின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள மைதான் (Maidaan) பார்வையாளர்களை கவர்ந்ததா என்பது குறித்து இங்கு காண்போம்.

1962யில் இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டு போட்டிகளில் எப்படி தங்கம் வென்றது, அதற்காக பயிற்சியாளர் ரஹீம் மற்றும் அணி வீரர்கள் எவ்வாறு உழைத்தார்கள் என்பதே இப்படத்தின் கதை.

1952 முதல் 1962 வரையிலான காலகட்டத்தில் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக சையத் அப்துல் ரஹீம் எவ்வாறு செயல்பட்டார் என்ற அவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி, அமித் ஷர்மா இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார்.

Helsinki ஒலிம்பிக்கில் இந்திய அணி 1-10 என்ற கோல் கணக்கில் யூகோஸ்லாவியா அணியிடம் படுதோல்வி அடைகிறது. அந்த தொடரில் போட்டியில் இந்திய வீரர்கள் ஷூ இல்லாமல் விளையாடினர். அதன் பின்னர் இந்திய கால்பந்து அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழவே, பயிற்சியாளரான சையத் ரஹீம் (அஜய் தேவ்கன்) புதிய வீரர்களை களமிறக்க வேண்டும் என்று கூறுகிறார்.

அதற்கான தேடலில் அவர் களமிறங்க ஐதராபாத், செகந்திரபாத், கேரளா, பஞ்சாப் என பல்வேறு இடங்களில் இருந்து வீரர்களை தனிப்பட்ட முறையில் தேர்வு செய்து ஒரு அணியை உருவாக்கிறார்.

அவர் தேர்வு செய்த அணி எப்படி படிப்படியாக வெற்றி பெற்று, இறுதியில் ஆசிய விளையாட்டில் எப்படி தங்கம் வென்றது என்பதே மீதிக்கதை.

விமர்சனம் :

படத்தின் ஆரம்பத்தில் ரஹீம் கிக் செய்த பந்து, டிராமை தாண்டி வளைந்து சிறுவர்களிடம் சென்று சேரும் அந்த காட்சியிலேயே அவர் எப்பேர்ப்பட்ட வீரராக இருந்திருப்பார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

பின்னர் தோல்வி குறித்து கால்பந்து கூட்டமைப்பு குழுவில் அதிகரிகள் கேள்விகள் எழுப்ப, அதற்கு ரஹீம் தனக்கே உரித்தான மிடுக்குடன் பதில் கொடுப்பதில் கவனம் ஈர்க்கிறார். படத்தில் காட்டப்படும் ஒவ்வொரு கால்பந்து போட்டியும் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

பியோடோர் லியாஸின் காட்சிப்பதிவு அந்த அளவிற்கு மிரட்சியாக உள்ளது. அதேபோல் பிற காட்சிகளை துஷார் கண்டி ராய் அழகாய் காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, அஜய் தேவ்கன் தனது மகனிடம் பேசும் ஒரு காட்சியில் தூரத்தில் கூட்ஸ் ரயில் செல்வதை காட்டியிருப்பதன் மூலம் இயக்குநரின் நேர்த்தி தெரிகிறது.

பயோபிக் படம் தான் என்றாலும் ஆவணப்படம் போல் இல்லாமல் கமர்ஷியல் படம் விறுவிறுப்பாக திரைக்கதை நகர்கிறது. பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி, வெற்றிக்கு அருகில் சென்று டிராவில் முடியும்போது, ஒட்டுமொத்த பிரான்ஸ் ஆதரவாளர்களும் ”Well Play, india” என எழுந்து நின்று கோஷமிடும் காட்சி Goosebumps மொமெண்ட்டிற்கு ஒரு சாம்பிள்.

அஜய் தேவ்கனின் மனைவியாக வரும் பிரியாமணி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். அதேபோல் கால்பந்து வீரர்களாக நடித்திருக்கும் அமர்த்தியா, சைதன்யா உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் சிறப்பு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும், பின்னணி இசையில் நம்மை அதிகம் கவர்கிறார்.

50, 60களின் காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச் சென்று, கால்பந்து விளையாட்டை பற்றி அறியாதவர்களையும் ரசிக்க வைக்கும் வகையில் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். அமீர்கானுக்கு ‘லகான்’, ஷாருக் கானுக்கு ‘சக் தே இந்தியா’ போல, அஜய் தேவ்கனுக்கு மைல்கல் படமாக அமைந்துள்ளது இந்த ‘மைதான்’.

பிளஸ் பாயிண்ட் :

படத்துடன் ஒன்ற வைக்கும் திரைக்கதை அஜய் தேவ்கன் உட்பட அனைவரின் தேர்ந்த நடிப்பு இசை மற்றும் காட்சியமைப்பு

மைனஸ் பாயிண்ட் :

பெரிதாக சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை.

மொத்தத்தில் ஒரு சிறந்த திரைப்பட அனுபவத்தை பெறவும், 60 ஆண்டுகளுக்கு முன் இந்திய கால்பந்து அணி கஷ்டப்பட்டு தங்கம் வென்றதை அறியவும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான் இந்த ‘மைதான்’.

ரேட்டிங் : 3.75/5

Related Posts

Leave a Comment