முலாம் பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் ?

by Lifestyle Editor

முலாம்பழங்களில் நீர்ச்சத்து அதிகம். வெளிப்புறத்தில் தடிமனான ஓடு போன்ற அமைப்பு இருந்தாலும், அதனுள்ளே ஆரஞ்சு போன்ற கூழ் வடிவ பழம் நமக்கு கிடைக்கும். அதில் ஆண்டிஆக்ஸிடண்ட் சத்துக்கள் அதிகம். சாலையோர தள்ளுவண்டி கடைகளிலும் கூட இந்தப் பழம் நியாயமான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது என்பதால் சாமானியர்களும் இதை வாங்கி சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கிறது.

ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் என இப்படி ஏதாவது ஒரு பழம் வாங்குவதற்காக நாம் கடைக்குச் செல்லும்போது தரமான பழங்களை தேர்வு செய்ய நினைப்போம். அந்தப் பழங்களின் வெளிப்புறத்தை பார்த்தாலே அவை எந்த அளவுக்கு கனிந்துள்ளது, அழுகத் தொடங்கியுள்ளதா என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால், முழாம்பழத்தின் வெளிப்புறப் பகுதியில் மஞ்சள் நிற ஓடு மட்டுமே இருக்கும். உள்ளுக்குள் எப்படி இருக்கும் என்பதை அவ்வளவு எளிதாக கணித்துவிட முடியாது. இத்தகைய சூழலில் தரமான பழம் வாங்க நினைப்போருக்காக பயனுள்ள டிப்ஸ் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

நிறத்தை சரி பார்க்கவும் :

முலாம்பழம் வாங்கும்போது முதலில் அதன் நிறத்தைதான் சரிபார்க்க வேண்டும். பழுக்காத காய் என்றால் அதன் ஓடுகளில் பச்சை நிறம் தென்படும். அதுவே பழுத்த பழம் என்றால் க்ரீம் போன்ற மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

தண்டை பார்க்கவும் :

முலாம்பழத்தில் தண்டு இருக்கிறதா என்பதை பார்க்கவும். நல்ல பழுத்த பழத்தில் தண்டு தானாக பிரிந்து விழுந்துவிடும். அப்படியே தண்டு இருந்தாலும் அதன் நுனிப்பகுதி உருண்டையாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.

நுகர்ந்து பார்க்கலாம் :

எல்லா பழங்களுக்கும் தனித்தனி வாசம் உண்டு. முலாம்பழத்தின் உள்ளே எந்த அளவுக்கு கனிந்து, இனிப்பாக இருக்கப் போகிறது என்பதை அதன் வாசத்தை கொண்டு தெரிந்து கொள்ளலாம். பழத்தின் அடிப்பகுதியை நுகர்ந்து பார்த்தால் இது தெரியவரும்.

சுண்டி பார்க்கவும் :

ஓடு போன்ற அமைப்பை கொண்ட முலாம்பழத்தை தட்டிப்பார்த்து வாங்கலாம். நீங்கள் விரல் வைத்து சுண்டும்போது மென்மையான ஒலி எலும்பினால் பழம் நன்றாக பழுத்துள்ளது என்று வைத்துக் கொள்ளலாம். அதுவே கனமான ஒலி எலும்பினால் இன்னும் காயாகவே இருக்கிறது என்று பொருள்.

எடையை பாருங்கள் :

கனிந்த முலாம்பழத்தின் உள்ளே இருக்கும் கூழ்பகுதி இலகுவான எடையை கொண்டிருக்கும். அதுவே காய் என்றால் மிக கனமானதாக இருக்கும். ஆகவே பழத்தை எடுக்கும்போதே, அதன் எடையை நீங்கள் சுயமாக கணித்து ஒரு முடிவுக்கு வர முடியும்.

Related Posts

Leave a Comment