உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஸ்நாக்ஸ் வகைகள்..

by Lifestyle Editor

ஸ்நாக்ஸ் என்றாலே அது வறுத்தது, பொரித்தது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த வகை உணவுகளில் ஆரோக்கியம் எதுவும் கிடையாது. வெறும் ஆபத்து தான் இருக்கிறது. அவற்றில் கலோரிகளும் டிரான்ஸ் ஃபேட்டும் அதிகமாக இருக்கும். அனால் ஊட்டச்சத்துக்கள் என எதுவுமே இருக்காது. இவற்றை வெற்று கலோரிகள் எனறு அழைப்பார்கள். இவற்றை தவிர்த்து விட்டு, கலோரிகள் குறைவாக, அதேசமயம் ஊட்டச்சத்துக்கள் அடர்த்தியாக இருக்கும் ஸ்நாக்ஸ்கள் எடுத்துக் கொள்வது தான் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

1. தயிர் என்றாலே அது சாதத்தில் சேர்த்து சாப்பிடும் ஒன்றாக மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் அதை ஒரு தனி உணவாகவே சாப்பிட முடியும். அதிலும் ஸ்நாக்ஸ் நேரங்களுக்கும் ஏற்ற உணவு. இதில் கால்சியம், புரதங்கள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக ப்ரோ – பயோடிக் பண்புகள் அதிக அளவில் இருப்பதால் குடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. இந்த தயிரோடு நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, கேரட் போன்ற காய்கறிகளைச் சேர்த்து மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். இது வெயிலுக்கு உடல் வெப்பத்தையும் தணிக்கும். அதேசமயம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். ஜீரணத்தையும் மேம்படுத்தும். அதனால் ஆரோக்கியமான டயடடை பின்பற்ற வேண்டுமென முயற்சி செய்தால் இதை சாப்பிடுங்கள்.

2. எல்லா பருவ காலத்திலுமே பழங்கள் மிக ஆரோக்கியமான சாய்ஸ் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக வெயில் காலத்தில் உணவாகவும் சிற்றுண்டியாகவும் நீங்கள் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். பழங்களில் நார்ச்சத்துக்களும் மினரல்களும் வைட்டமின்களும் அதிக அளவில் கிடைக்கும். இவை ஜீரணத்தை எளிதாக்கி மெட்டபாலிசத்தை தூண்டும். அதிலும் வெயில் காலத்தில் தண்ணீர்ச்சத்து நிறைந்த பழங்களாக எடுத்துக் கொள்வது உடலை நீரேற்றத்துடனும் வைத்திருக்க உதவி செய்யும். உடல் எடையும் சீராகக் குறையும்.

3. சாட் வகைகள் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்று தான். மாலை நேரங்களில் ஊர் முழுக்க சாட் முளைத்து விடுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவதால் இதை எளிமையாக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் வெள்ளை கொண்டைக்கடலைக்கு பதிலாக கருப்பு கொண்டைக்கடலை தேர்வு செய்யலாம். வேகவைத்த கொண்டைக்கடலையோடு நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், சாட மசாலா, லெமன் ஜூஸ் மற்றும் உப்பு சேர்த்து சாட் செய்து சாப்பிடலாம். இதன் கிளைசெமிக் குறியீடும் குறைவு. கலோரிகளும் மிதமான அளவில் இருக்கின்றன. இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் புரதங்கள் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து, முழுமையாக உணர வைக்கும். உடல் எடையும் ஆரோக்கியமாக சீராகக் குறையும்.

4. நிறைய பேருக்கு சாண்ட்விச் பிடிக்கும். ஆனால் அதில் சீஸ், மயோ, ஸ்பிரட், கெட்சப், ஜாம் என சேர்த்து சாப்பிடும்போது எடை அதிகரிதது விடும் என்று பயப்படுவோம். ஆனால் அதே சாண்ட்விச்சை வெயிட் லாஸ் சாண்டவிச்சாக மாற்ற முடியும். பிரௌன் பிரட் எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு வட்ட வடிவில் நறுக்கிய வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை வைத்து சாண்ட்விச்சாக சாப்பிடுங்கள். ஸ்பிரட் தேவைப்பட்டால் புரோட்டீன் நிறைந்த பீநட் பட்டரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. கார்ன் அதிக நார்ச்சத்துக்களும் புரதங்களும் நிறைந்த ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ். காலை நேர உணவு இடைவெளியின் போதோ அல்லது மாலை சிற்றுண்டி நேரத்திலோ வேகவைத்த சோளம் சாப்பிடலாம். இந்த சோளத்தை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளும்போது சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு உண்டாகும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும்.

Related Posts

Leave a Comment