அதிரசம் ரெசிபி …!

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – இரண்டு கப்
வெல்லம் – 2 கப்
நெய் – 1 ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன்
எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு

செய்முறை

அரிசியை நன்குக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அரை மணி நேரம் ஊறிய பின் வீட்டில் ஃபேன் காற்றில் துணியில் அரிசியை பரப்பி காய விடவும்.

ஈரம் வற்றியதும் மிக்ஸியில் மைய அரைக்கவும். முழுவதையும் அரைத்தபின் சல்லடைக் கொண்டு சலிக்கவும்.

மிஞ்சும் கட்டி மாவுகளை தனியாக வைத்துவிடவும்.

அடுத்ததாக வெல்லத்தை உடைத்து பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி உருக வையுங்கள். வெல்லம் நன்கு கொதிக்க வேண்டும்.

வெல்லப் பாகு பதத்தைத் தெரிந்து கொள்ள தண்ணீரில் ஒரு ஸ்பூன் விட்டுப் பாருங்கள். அது தண்ணீரோடு கரையாமல் இருக்க வேண்டும். கையில் எடுக்கும்போதும் நழுவி ஓடாமல் இருக்க வேண்டும்.

வெல்லப் பாகு தண்ணீரிலிருந்து எடுக்கும்போது கையில் உருட்டினால் ஜெல் போன்று உருளையாகும். அதுதான் சரியான வெல்லப் பாகு பதம்.

அப்படி வெல்லப் பாகு தயாரானதும் அதோடு அரைத்து சலித்து வைத்துள்ள மாவை கொட்டி கட்டியாகாதவாறு பதமாகக் கிளறவும். அதோடு ஏலக்காய் பொடியும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நன்குக் கலந்ததும் நெய் ஊற்றிக் கிளருங்கள். மாவு சற்று இளகிய பதத்தில் இருக்க வேண்டும்.

தற்போது அந்த மாவை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி பருத்தித் துணியால் பாத்திரத்தின் வாயைக் கட்டிவிடுங்கள். அந்த மாவு இரண்டு நாட்கள் ஊறினால்தான் அதிரசம் நன்றாக வரும்.

இரண்டு நாள் கழித்து மாவை எடுத்தால் சற்று இறுக்கமாக இருக்கும். கையில் நெய் தடவிக் கொண்டு மீண்டும் பிசைந்தால் பழைய நிலைக்கு வரும்.

தற்போது அந்த மாவுகளை சப்பாத்திக்கு உருளை போடுவதுபோல் உருளைகளாக்கிக் கொள்ளுங்கள்.

இதற்கிடையில் அடுப்பில் கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ச்சிக் கொள்ளுங்கள்.

பின் வாழை இலையில் நெய் தடவி அதில் தேவையான அளவில் அதிரசம் தட்டி வேண்டுமென்றால் நடுவே ஓட்டை போட்டுக்கொள்ளுங்கள்.

தற்போது தட்டி வைத்துள்ள அதிரச மாவை எண்ணெயில் போட்டு நன்கு சிவக்க பொறித்து எடுங்கள்.

சுவையான அதிரசம் தயார்.

Related Posts

Leave a Comment