பீட்ரூட் ரெசிபிகள் …!

by Lifestyle Editor

மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளதில் பீட்ரூட் அதன் நிறம் மற்றும் சுவை காரணமாக தனித்து நிற்கிறது. வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பீட்ரூட் சிலருக்கு பிடிக்காது. அதற்கு காரணம் அதன் இனிப்பு கலந்த சுவை.

பொதுவாக இனிப்புகளை விரும்பி சாப்பிடும் சிலருக்கு கூட பீட்ரூட் பிடிக்காமல் இருக்கும். ஆனால் நம் உடலுக்கு பீட்ரூட் தரும் நன்மைகள் அளவிட முடியாதது. செரிமான அமைப்பு மற்றும் மூளை ஆரோக்கியத்தை பலப்படுத்துவது முதல் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பது வரை பீட்ரூட் பல நன்மைகளை கொண்டிருக்கிறது. ஒரு நாளை ஆற்றலுடன் துவங்க முதல்படி ஆரோக்கியமான காலை உணவு. நாளின் இந்த முதல் உணவில் பீட்ரூட் சேர்த்து செய்ய கூடிய சில ரெசிபிக்களை இங்கே பார்க்கலாம்.

1. பீட்ரூட் பராத்தா:

தேவையான பொருட்கள் :

1 கப் – கோதுமை மாவு

1 டீஸ்பூன் -உப்பு

1 டீஸ்பூன் – நெய்,

1 பீட்ரூட் – (துருவியது),

1 டீஸ்பூன் – பிளாக் பெப்பர்

1 டீஸ்பூன் – சிவப்பு மிளகாய் தூள்

செய்முறை:

– ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கோதுமை மாவு, உப்பு மற்றும் நெய் சேர்த்து தேவைக்கேற்ப நீர் கலந்து மாவாக பிசையவும்.

– நன்றாக பிசையப்பட்ட மாவை 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். துருவியது பீட்ரூட்டில் உப்பு, பெப்பர் மற்றும் சிவப்பு மிளகாய் பவுடரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

– இப்போது நன்றாக பிசையப்பட்ட மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி நன்றாக உருட்டவும்

– இப்போது மாவு உருண்டையின் நடுவே பீட்ரூட் கலவையை நிரப்பி மாவை மூடி மீண்டும் நன்றாக உருட்டி ஒரு தவாவில் வைத்து சுட்டெடுக்கவும்.

– பிரவுன் நிறமாக மற்றும் மிருதுவாக இந்த பராத்தா மாறியதும் அதை தவாவில் இருந்து எடுத்து பரிமாறுங்கள்.

2. பீட்ரூட் சில்லா:

தேவையான பொருட்கள் :

1 – பீட்ரூட்

1/2 கப் -கடலை மாவு

1 டீஸ்பூன் – சிவப்பு மிளகாய் தூள்

1 டீஸ்பூன் – பிளாக் பெப்பர்

தேவைக்கேற்ப – உப்பு

செய்முறை:

– பீட்ரூட்டை எடுத்து நறுக்கிய பின் அதை நன்கு கூழாக்கி கொள்ளுங்கள்

– ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள கடலை மாவு, பீட்ரூட் கூழ், உப்பு, மிளகு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்

– இந்த கலவையை குக் செய்வதற்கு முன் தேவைக்கேற்ப ஃப்ரூட் சால்ட் சேர்ப்பது மாவை நன்றாக மிருதுவாக்கும்

– இந்த கலவையை ஒரு கடாயில் கொட்டி சிறிது நேரம் தோசை போல வேக வைக்கவும். நன்கு மிருதுவாக வெந்த பிறகு சூடாக எடுத்து சாப்பிடலாம்.

3. பீட்ரூட் போஹா:

தேவையான பொருட்கள் :

2 கப் – அரிசி,

1 கப் – துருவிய பீட்ரூட்,

1 டீஸ்பூன் – எண்ணெய்,

உங்களுக்கு விருப்பமான நட்ஸ்கள்,

சிறிதளவு – சீரகம்,

கொத்தமல்லி, கறிவேப்பிலை – கைப்பிடி

2- நறுக்கிய தக்காளி

1 ஸ்பூன் – எலுமிச்சை சாறு

செய்முறை:

– அரிசியை எடுத்து 2 – 3 முறை நன்கு தண்ணீரில் அலசிய பிறகு தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

– ஒரு கடாயை எடுத்து அதில்1 டீஸ்பூன் சமையல் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கி அதில் உங்களுக்கு விருப்பமான நட்ஸ்களை சேர்த்து வறுக்கவும்.

– வறுபட்ட நட்ஸ்களை தனியே எடுத்து வைத்து விட்டு, பின் அதே எண்ணெயில் சீரகத்தை சேர்க்கவும்.

– பிறகு கடாயில் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் துருவிய பீட்ரூட்டை கொட்டி மென்மையான பதம் வரும் வரை வதக்கவும்.

– தனியே எடுத்து வைத்த அரிசி மற்றும் உப்பு சேர்த்து மென்மையாக கலக்கவும். லோ ஃபிளேமில் 2 – 4 நிமிடங்கள் குக் செய்த பிறகு அடுப்பை அணைக்கவும்.

– இப்போது சிறிதளவு எலுமிச்சை சாறு, நறுக்கிய தக்காளி மற்றும் வறுத்த நட்ஸ்களை கலக்கவும்.

– இறுதியாக கொத்தமல்லி தழைகளால் அலங்கரித்து பரிமாறவும்.

4. பீட்ரூட் கட்லெட்:

தேவையான பொருட்கள் :

1 கப் துருவிய – பீட்ரூட்,

4 வேகவைத்த – உருளைக்கிழங்கு,

சுவைக்கேற்ப -உப்பு,

1/2 டீஸ்பூன் – சிவப்பு மிளகாய் தூள்,

1 டீஸ்பூன் – சீரகப் பொடி,

1/2 டீஸ்பூன் – கரம் மசாலா,

1/2 டீஸ்பூன் – மல்லி தூள்,

ஒரு சிட்டிகை – சாட் மசாலா.

செய்முறை:

– பீட்ரூட்டை அரைத்து, அதிலிருந்து வரும் அதிகப்படியான தண்ணீரை பிழிந்து கொள்ளவும்.

– ஒரு கிண்ணத்தை எடுத்து பிழியப்பட்ட பீட்ரூட் மற்றும் வேக வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு சேர்த்து இரண்டையும் சரியாக கலக்கவும்

– பின் உப்பு, சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள், மல்லி தூள், சாட் மசாலா போன்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.

– இந்த கலவையை கைகளால் நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி கொள்ளவும்.

– இதை tikkis வடிவில் தட்டையாக்கி சிறிது நெய் கலந்து தவாவில் வறுக்கவும் அல்லது பேக் செய்யவும்.

– இதற்கு புதினா சட்னி அல்லது கெட்ச்அப் சரியான தேர்வு.

5. பீட்ரூட்-கேரட் ஜூஸ்:

நறுக்கிய பீட்ரூட் மற்றும் கேரட்டை ஒன்றாக கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அடித்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உங்களுக்கு விருப்பமான இனிப்பு சுவைக்காக சிறிதளவு சர்க்கரை அல்லது தேன் கலந்து கொள்ளுங்கள்.

Related Posts

Leave a Comment