இன்று மன்னர் 3ம் சார்லஸின் முடிசூட்டு விழா – விழாக்கோலம் பூண்ட லண்டன் ..

by Editor News

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று அந்நாட்டின் மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டும் விழா நடைபெறவுள்ளது. விழாவையொட்டி கோலாகல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்தவர் ராணி 2-ம் எலிசபெத். நீண்ட காலம் ஆட்சியில் இருந்தவர் என்கிற பெருமையும் ராணி எலிசபெத்துக்கு உண்டு. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி 96வது வயதில் அவர் காலமானார். அதன்பின்னர் ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக பொறுப்பேற்றார். 3-ம் சார்லஸ் என்று அழைக்கப்படும் மன்னர் சார்லஸ் அரியனை ஏறியபோதும், அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. இந்த சூழலில் மே 6-ந் தேதி மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று ( மே-6) மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெறுகிறது.

கடைசியாக கடந்த 1953-ம் ஆண்டு ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு, 70 ஆண்டுகள் கழித்து தற்போது பாரம்பரிய முடிசூட்டு விழா நடைபெற இருக்கிறது. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி ஒட்டுமொத்த இங்கிலாந்தும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரையில் , மன்னர் சார்லஸும் ராணி கமிலாவும் மின்சாரத்தால் இயங்கும், குளிர்சாதன வசதியும், ஜன்னல்களும் கொண்ட சிறிய சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவர்.

உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு( இந்திய நேரப்படி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா தேவாலயத்துக்குள் நுழைந்தவுடன் விழா கோலாகலமாக தொடங்கும். மன்னர்கள் பயன்படுத்திய 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த தங்க முலாம் பூசப்பட்ட பாரம்பரிய இருக்கையின் பின்னாலிருந்து கேன்டர்பரி ஆர்ச்பிஷப், மன்னரை அங்கீகரித்து ஒரு அறிவிப்பை வெளியிடுவார். பின்னர் இசை வாத்தியங்கள் முழங்கியதைத் தொடர்ந்து சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக மன்னர் 3-ம் சார்லஸ் உறுதிமொழி ஏற்பார். பின்னர் மன்னர் முடிசூட்டு இருக்கையில் அமரவைக்கப்பட்டு, மன்னருக்காக சிறப்பாக தயாரிக்கப்படும் புனித எண்ணெய் தேய்த்து, ஆசீர்வதிக்கப்படுவார். பின்னர் அரசரிடம் மதம் மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரத்தை அளிக்கும் வகையில் அரச குடும்ப புனித உருண்டை அளிக்கப்பட்டு, அரசு அதிகாரங்களை அளிக்கும் செங்கோல் வழங்கப்படும். இறுதியாக புனித எட்வர்ட்டின் கிரீடம் சூட்டப்படும்.

அதனை தொடர்ந்து மன்னர் சார்லஸ் உரிய மரியாதையுடன் அரியனையில் அமரவைக்கப்படுவார். தொடர்ந்து ராணி கமிலாவும் முடிசூட்டிக் கொள்கிறார். பின்னர் மன்னரும், ராணியும் மீண்டும் சாரட் வண்டியில் ஊர்வலமாக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்புவார்கள். பக்கிங்காம் அரண்மனையின் மாடத்தில் இருந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். ஒரு வாரம் முடிசூட்டு விழா கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி, அதனை மக்கள் கண்டு களிக்கும் வகையில் 8ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உலக நாடுகளின் தலைவர்கள் உட்பட சுமார் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா சார்பில் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். அதேபோல் இவ்விழாவில் அமெரிக்காவின் சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பதில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்கிறார். அமெரிக்க அதிபர் எவரும் இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment